”மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி” - இளைய தளபதி விஜயின் அற்புதமான பேச்சு  03-10-2018

’காந்தி ஜெயந்தி’ அன்று ’சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு நடந்தது. எதிர்பார்த்ததைவிட அளவுக்கு அதிகமான ரசிகர்கள் மற்றும் கலைஞர்களின் கூட்டம். அரங்கம் நிரம்பி வழிந்ததோடு இல்லாமல் வெளியிலும் கூட்டம். சமீபத்தில் நடந்த மிகப்பெரிய அளவிலான கூட்டம் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் ’சர்கார்’ படம்தான்.

இதில் விஜய் மேடைக்கு வந்ததும் கூட்டம் கரவோசை, விசிலோசை கைதட்டும் ஓசை யாவும் அடங்க சில நிமிடங்கள் ஆனது. அவர்களின் ஆர்ப்பரிப்புகள் நின்றதும் விஜய் நன்றி சொல்லிவிட்டு ”நண்பர்களே… நண்பிகளே…” என்று பேச ஆரம்பித்ததும் மீண்டும் அரங்கம் அதிரும்படியான சத்தம். ஆரோக்கியமாக இருந்தது.

எந்த விழாவிலும் இல்லாத அளவிற்கு விஜய் இந்த அரங்கில் மிக அற்புதமாகவும் நிதானமாகவும் பேசினார் என்று சொல்லலாம். முதலில்  இதில் பணியாற்றிய கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி சொன்னார். இவர்கள் உழைப்புதான் ’சர்கார்’ என்றார். தொடர்ச்சியாக, முத்தாய்ப்பாக ”அதாவது வெற்றிக்காக எவ்வளவு வேணும்னாலும் உழைக்கலாங்க. ஆனா வெற்றியடைஞ்சிடக் கூடாதுங்கிறதுக்காகவே ஒரு கூட்டம் உழைச்சிக்கிட்டு இருக்கு” என்று சொல்ல அந்த நகையாடலைப் புரிந்துகொண்ட கூட்டத்தினர் ஆரவார ஒலி எழுப்பினார்கள்.

”உசுப்பேத்துறவன்கிட்ட உம்முனும் கடுப்பேத்துறவன்கிட்ட கம்முனு இருந்தா வாழ்க்கை ஜம்னு இருக்கும்!” என்று யாரோ ஒருவர் சொன்ன தத்துவத்தை தன் வாழ்நாளில் கடைபிடிப்பதாகவும் அது வாழ்க்கைக்கு பயனுள்ளதாகவும் இருப்பதாக தெரிவித்தார்.

இந்த விழாவின் நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரசன்னா அவர்கள் மேடைக்கு வந்து அரசியலை பேச ஆரம்பித்தார். அதற்கும் பக்குவதோடு பதில் சொன்னார் இளைய தளபதி. அது கைதட்டலைப் பெற்றது. ”நீங்க முதல்வரா வந்து மாத்த நெனைக்கிற முதல் விஷயம் என்ன”? என்று கேட்க, ”…அதாவது கற்பனையா…. கற்பனையா கேட்கிறீங்க. அது எல்லாரும் சொல்றதுதாங்க இந்த லஞ்சம், ஊழல் இதெல்லாம் ஒழிக்கிறதுக்கு என்னென்ன ஸ்டெப்ஸ் எடுக்கணுமோ அத நான் எடுப்பேன்”. என்று ஒரு குட்டிக்கதையையும் சொன்னர்.

அனைத்தும் அருமை.

அரசியல் சாக்கடை அல்ல. அரசியலும் பொருளாதாரமும்தான் வாழ்க்கை. அரசியலை விட்டு நாம் விலகினாலும் அரசியம் நம்மீது ஆட்சி செலுத்தும். கலையும் அரசியலும் நம் அன்றாடங்களில் தவிர்க்கமுடியாதது. அரசியல் எனக்குப் பிடிக்காது என்று பம்மாத்துகிறவர்களில் மத்தியில் விஜய் அரசியலுக்கு வருவதில் ஆர்வம் காட்டுகிறார் என்பதை நாம் மகிழ்ந்து வரவேற்கவேண்டும். சினிமாக்காரன் என்றாலும் சினிமாக்காரன் அரசியலுக்கு வருகிறான் என்றாலும் பலரின் பார்வையில் ஏளனம் வெளிப்படுகிறது. உண்மையாக, நேர்மையாக உழைக்காமல் எந்தத் தொழிலிலும் முன்னுக்கு வர முடியாது. சினிமாவில் விஜய் இவ்வளவு உயர்ந்து, வயது வித்யாசமின்றி பெருவாரியான மக்களைக் கவர்ந்து ”இளைய தளபதி”யாக நிற்கிறார் என்றால் அவரின் உழைப்பு.

அவரின் அப்பா இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்கள் கூரிய அரசியல் பார்வை உடையவர். முற்போக்கு சிந்தனையாளர். அவர் நிறைய அரசியல் படங்கள் இயக்கி அதில் வெற்றிகள் கண்டிருக்கிறார் அந்த ரத்தத்தில் இருந்து வந்திருக்கும் விஜய் அரசியலுக்கு வருவதில் ஆச்சர்யம் இருப்பதாக எனக்கு ஒன்று தெரியவில்லை. யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம். மக்கள் தீர்மானித்துக்கொள்ளட்டும்

விஜய் அரசியலுக்கு வந்து, முதல்வராக ஆகி ஒரு நல்லாட்சியை தந்தால் இந்த தமிழ்நாட்டில் நான் வாழமாட்டேன் என்று சென்று விடுவோமா என்ன? நல்லவர்களை, வல்லவர்களை வரவேற்போம்.

’இளையதளபதி’ விஜயின் அரசியல் வருகையை வரவேற்பதோடு, ’சர்கார்’ படம் சிறந்த வெற்றிகளைப் பெறவேண்டுமென ’ஆன்லைன் ஃபிலிம் நியூஸ்’ வாழ்த்துகிறது.

 

நன்றி !

ஆசிரியர்,

ஆன்லைன் ஃபிலிம் நியூஸ்