தமிழ் திரைப்படங்கள் - வேதம் அ.கென்னடி  07-09-2018

பாகம் - 1

நாடகம் பெற்றெடுத்த ஒரு நாகரிக குழந்தைதான் சினிமா.

நாம் சிறியவர்களாக இருக்கும்போது நமக்குள் முதல் தாக்கத்தை ஏற்படுத்துவது சினிமாவாகத்தான் இருக்கிறது. படத்தின் நாயக நாயகர்கள்தான் பிரமாண்டமாக நம் கண்களுக்குத் தெரிகிறார்கள்.

சினிமா இந்தச் சமுதாய மாற்றத்திற்கு அதிக பட்சமாக வினையாற்றுகிறது. இது ஆரம்ப காலங்களிலிருந்து இன்று வரை ஒரு பிரமிப்பின் குறியீடாகவே இருந்துகொண்டு வருகிறது. தமிழகமோ பிற பகுதிகளோ ஒரு தொன்மையான எழுத்து வடிவிலான இலக்கியம் ஏற்படுத்துகிற தாக்கங்களைவிட திரைப்படங்கள் வெகுவாக தன் தாக்கங்களைப ஏற்படுத்தியும் பரவலாக்கியபடியும் இருக்கிறது.

எத்தன்மையான வெளிபாட்டிற்கும் இது மிகவும் நேர்த்தியான ஸ்திரமான ஊடகம். இதன் வலிமை ஏக ஆச்சர்யங்களை உண்டு பண்ணியிருக்கிறது. போகிற போக்கில் நிறைய அசாத்தியங்களை சாதரணமாக சாத்தியப்படுத்தியிருக்கிறது என்பதை எவரும் மறுதலிக்க முடியாது.

சத்தியமானது; சாசுவதமானது !

தொடக்க காலங்களில் திரைப்படங்களில் புராண இதிகாசங்கள் கடவுள்கள் குறித்த கதையாடல்கள் மாய ஜாலங்களை கதையின் மையக்கருவாக்கி திரைப்படங்களை உருவாக்கினார்கள். திரைப்படங்கள் ஒரு பூதகரமான மாற்றங்களை மக்களிடையே நிகழ்த்தியது.

அதன் தொடர்ச்சியாக தமிழ் இலக்கியங்கள், இதிகாசங்கள் திரைப்படமாக்கப்படுகிறது. அதில் மிகையாக  நாடக கலைஞர்கள் பங்கெடுக்கிறார்கள். நீண்ட வசனங்கள், ஏகப்பட்ட பாடல்கள் இப்படி போகிறது. பேச விரும்பிய விஷயங்களை பாடல்கள் மூலம் தெரிவிப்பது ஒரு உத்தியாகவே இருந்தது. அது விரும்பப்படும் ஒன்றாக ஆக்கப்பட்டு இருந்தது. அக்காலகட்டத்தில் நடிகர்களுக்கான தகுதிகளில் மிக முக்கியமானது பாடத் தெரிந்திருக்கவேண்டும்.

மன்னர்களின் வாழ்க்கை, அரசமைப்பு, புலவர்கள், வட்டாரம் சார்ந்த மக்கள் நாயகர்கள், பிரசித்திபெற்ற பகுதிவாழ் திருடர்கள், கற்பனா கதாபத்திரங்கள், பேசியது இப்படி கதைகள் மையம் கொள்கிறது. சிலவை எதார்த்த வாழ்க்கையின் நிஜங்கள் பேசியது. அன்றி பகுத்தறிவு, முற்போக்கு கருத்துகளை பேசிய படங்கள் மிக அரிது. குடும்பு உறவுகள் சார்ந்த விஷயங்களை படங்கள் மேன்மை படுத்தியது. உறவுகளின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தியது. சமூக ஒழுக்கம், தனிமனித ஒழுக்கம் சமூக வெளியில் ஒரு மனிதன் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை ஆன்மீகம் சார்ந்து, அறம் சார்ந்து நமக்கு வலியுறுத்தியது.

                                                                                                                                             (தொடரும்…)