சிவப்பு சிந்தனையாளர்
தோழர் எஸ். ஏ. முருகையன் l Thozhar S A Murugaiyan I Ambalappattu South I Orathanadu Taluk I Thanjavur
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவர் தோழர் எஸ். ஏ. முருகையன்.
ஆம்பலாப்பட்டில் முதன் முதலாக1943-ல் கம்யூனிஸ்ட் கட்சி கிளை துவங்கியபோது து. கதிரேசன், காமாட்சி, வே. அ. சுப்பையன் அல்லாடி அண்ணாமலை போன்ற தலைவர்களோடு தோழர் எஸ். ஏ. எம் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கக் கூடிய எஸ். ஏ. முருகையனும் ஒருவர்.
ஆம்பலாப்பட்டு தெற்கில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் அரசு புறம்போக்கு நிலத்தில் விவசாயம் செய்துகொண்டு இருந்ததைப் பறித்து மதுக்கூர் ஜமீன்தாரின் கையாட்களுக்குப் பிரித்து கொடுத்தார்கள். இதனால் அன்றாடம் பிழைப்பு நடத்த முடியாமல் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஜமீனிடம் கடன் வாங்கி இருந்தார்கள். அதற்கு ஒன்றுக்குப் பத்தாக நோட்டு எழுதி வாங்கி வைத்துக்கொண்டு தொழிலாளர்களை மிரட்டியதற்காகவும், ஏழைக் கூலித் தொழிலாளர்களிடம் பறித்த நிலத்தை மீண்டும் அவர்களுக்கே வழங்கு.
"உழுபவனுக்கே நிலம் சொந்தம்" என மதுக்கூர் ஜமீன்தாரை எதிர்த்து தனது தோழர்களோடு வர்க்கப் போராட்டத்தை நடத்திய மிக முக்கியமான தோழர்களுள் ஒருவர் தோழர் எஸ். ஏ. எம். இதற்காக மக்களைத் திரட்டி போராடியதற்காக ஜமீன் வழக்குத் தொடுத்தார். அப்போது அரசு அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் அரசு மக்களின் போராட்டத்தை ஒடுக்க தோழர்களோடு தோள் கொடுத்து போராடிய வாட்டாக்குடி இரணியன், சாம்பவனோடை சிவராமன் போன்றோர்களுக்கு துப்பாக்கி சூட்டிங் ஆர்டர் பிறப்பித்தது. கட்சியின் அறிவுறுத்தலின் பேரில் தோழர் எஸ். ஏ. எம் - மும் மற்ற தலைவர்களும் தலைமறைவானார்கள். தோழர் எஸ். ஏ. எம் அவர்களுக்கு தலைமறைவு வாழ்க்கை பல ஏராளமான அனுபவங்களைக் கொடுத்தது. வாட்டாக்குடி, நாட்டுச்சாலை, முத்துப்பேட்டை, சாம்பவானோடை, வடசேரி, திருவோணம், வெட்டுவாக்கோட்டை, ஊரணிபுரம், வேப்பங்காடு, கரம்பயம், செண்டாங்காடு, ஆலத்தூர், முசிறி, மதுக்கூர், பட்டுக்கோட்டை, அலிவலம், வெங்கரை, காயாவூர் மற்றும் அதம்பை என இன்னும் பல ஊர்களைக் கடந்து தினம் கால்நடை பயணமாகவே தலைமறைவாக இருந்தார் தோழர் எஸ். ஏ. எம்.
இரவு நேரம் ஆகிவிட்டால் எந்த ஊரில் போய்க்கொண்டு இருக்கின்றாரோ அங்குள்ள தோழர் ஒருவர் வீட்டில் அனுமதிக் கேட்டு இரவு தங்கிக் கொள்வார். அன்று அந்த தோழர் வீட்டில் என்ன சாப்பாடு இருக்கின்றதோ அதை வாங்கி சாப்பிட்டுவிட்டு காலை எப்போதும் போல் அடுத்த ஊருக்கு கிளம்பி விடுவார். தோழர்களைச் சந்தித்துப் பேசுவார். ஒரு ஊரில் ஒரு நாளைக்குமேல் அதிகமாக தங்கியதில்லை என்று என்னிடம் ஒரு முறை சொன்னார். ஒரே ஒரு முறை மட்டும் சில்லத்தூர் வெட்டிக்காடு பாலத்தின் கீழ் மூன்று நாள் தங்கியிருந்தேன் என்றார். அப்போது காவல்துறை சுற்று வட்டார பகுதிகளில் உச்சபட்ச கண்காணிப்பில் இருந்தது. தோழர் தங்கியிருந்த பாலத்தின் மேலே பாசணத்துக்கான ஆறு, கீழே வடிகால் ஆறு என இரண்டு ஆறுகள் சந்திக்கும் இடம் என்று அவர் சொல்ல நான் கேட்டுயிருக்கின்றேன். இம்மாதிரி பல்வேறு ஊர்களில் தங்கியிருந்தபோது அங்குள்ள தோழர்களின் நட்பு இவருக்கு இலகுவாக கிடைத்தது. வெட்டுவாக்கோட்டை ரெங்கசாமி இவருக்கு நெருங்கிய நண்பர். இப்படி ஊர் ஊராக தலைமறைவாக இருந்தார் தோழர் எஸ். ஏ. எம் அவர்களை ஊரில் முகாமிட்டிருந்த காவல்துறையினர், ’எங்கே உங்கள் தலைவன் எஸ். ஏ. எம் மற்றும் இரணியன், சிவராமன்?’ என்று கேட்டுத் தெருத்தெருவாக சென்று எல்லா வீடுகளையும் அடித்து நொறுக்கினர். சிலர் வீடுகளில் வாசல்படி கூரையில் வேப்பிலையைச் சொருகி வைத்துவிட்டு "நேத்துதான் பொண்ணுக்கு குழந்தை பிறந்து இருக்கு" என்பார்களாம். சிலர் குழந்தைகளைக் கிள்ளிவிட்டு ’காய்ம்பீய்ன்’னு கத்த விடுவார்களாம். இந்தச் செயல்களைப் பார்த்ததும் காவல்துறை சென்றுவிடுவார்களாம். மக்களெல்லாம் அல்லோலப்பட்டுப் போனார்கள். சொல்லொன்னா துயரத்திற்கு ஆளானார்கள். சிலர் செய்வதறியாது தெருவை விட்டு ஓடிப்போய் வயல்வெளி பக்கம் பெரிய பெரிய வரப்புகளுக்கும் கீழ் பதுங்கி ஒழிந்துகொண்டு இரவு முழுவதும் காவல்துறையினர் செய்யும் அட்டகாசத்தைப் பார்த்துக்கொண்டு இருப்பார்களாம். காவல்துறையின் அடாவடித்தனம் அதிகரித்துக்கொண்டே போனது. வீட்டிற்குள் போய் பெண்களை தலைமுடியை பிடித்து ’பரபர’வென்று இழுத்துக்கொண்டு வாசலில் போட்டு அடித்து உதைத்து கொடுமைப் படுத்தினர். ஊரில் யார் கையில் கிடைக்கிறார்களோ அவர்களைப் பிடித்து அடிப்பார்கள்; உதைப்பார்கள்; முட்டிப்போட சொல்வார்கள்; தோப்புக்கரணம் போடச் சொல்வார்கள்; வீட்டில் உள்ள பாத்திரத்திரங்களை எல்லாம் அடித்து நொறுக்குவார்கள்; ஆடு மாடுகளையெல்லாம் அவிழ்த்து துரத்திவிடுவார்கள்; கொல்லையில் விளைந்திருக்கும். கேழ்வரகு, கம்பு, சோளம் போன்றவைகளையெல்லாம் அடித்து நொறுக்குவார்கள்; மரத்தில் விளைந்திருக்கும் மாங்காய்களையும், பாலா கனிகளையும் அறுத்து பூதியாக சாலையில் வீசுவார்கள்.
காவல்துறையின் அடாவடித்தனம் அதிகமாகிக்கொண்டேயிருத்தது. ஒருமுறை ஊரின் நடுப்பகுதியான கேணிப்பாலத்திலிருந்து மக்களை எல்லாம் திரட்டிக் கொண்டுவந்து முட்டிப்போட்டு நடக்கச் சொன்னார்கள். குத்துக்கப்பி சாலை இரண்டு கிலோமீட்டர் தூரம். முட்டிப்போட்டு நடந்தவர்களுக்கெல்லாம் காலில் ரத்தம் சொட்டச் சொட்ட வழிந்தது. "அய்யோ ! ரத்தம் வருதே" என்று காலைப் பிடித்துக்கொண்டு எழுந்தால் "எங்கே காட்டு" என்று முட்டியிலேயே அடிப்பார்கள்.
வெள்ளைக்கார அரசின் ஏவல் கூலிகளான அரைக்கால் காக்கிச்சட்டை போட்ட அடியாட்களாக சினம் கொண்டு முகாமிட்டிருந்தார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை தண்டனையாக அளிப்பார்கள். இந்த மக்களுக்கான போராட்டத்தில் தோழர் எஸ். ஏ. எம் அவர்கள் மூன்றாண்டு காலம் (1948-1950) தலைமறைவு வாழ்க்கையில் இருக்கும்போதே காவல்துறையின் சதிவலையில் வடசேரியில் டீ கடையில் உட்கார்ந்திருந்த ஒருவரால் காட்டிக்கொடுக்கப்பட்டு வடசேரி சவுக்குத் தோப்பில் வாட்டாக்குடி இரணியனை அதிகாலையில் காவல்துறை சுற்றி வளைத்தது. எந்தப் பக்கமும் தப்பிக்க முடியாத இரணியனை "ஓடி தப்பித்துக்கொள்" என்றது காவல்துறை. "வெள்ளைக்காரர்களின் ஏவல் நாய்களே !... இரணியன் தப்பிக்க முயற்சி செய்தான் சுட்டோம் என்று சொல்வதற்கா ... என் மார்பில் சுடுங்கடா" என்று நெஞ்சம் உயர்த்திக் காட்டினார். வெள்ளைக் கொள்ளைக்கார ஆட்சியின் கருப்பு குண்டுகள் இரணியனின் இதயத்தை இரக்கமற்று துளைத்தது. சிவப்பு குருதி கொப்பளிக்க மளமளவென்று ஆறடி உயரம் கொண்ட இரணியனின் உடல் பூமியில் சரிந்தது. தன் தோழனுக்கு உதவியாளனாக இருந்த ஆறுமுகம் "என் உயிர் தோழனையே சுட்டுட்டிங்களேடா என்னையும் சுடுங்கடா" என்று மார்பைக் காட்டினார். ”உனக்கு சூட்டிங் ஆர்டர் கிடையாது. நீ ஓடி தப்பித்துக்கொள்" என்று காவல்துறை எச்சரித்தது. "அட தே ... ... ... மவெங்கெளே ... என் தோழனே போயிட்டான் நான் இருந்தால் என்ன இல்லாட்டி என்ன என்னையும் சுடுங்கடா ..." என்று கர்ச்சித்தார் ஆறுமுகம். வெள்ளைக்கார்களின் அனுமதி இல்லாத துப்பாக்கித் தோட்டங்கள் அவரது இதயத்தையும் சல்லடையாக சிதறடித்தது. ஆம்பலாப்பட்டு ஆறுமுகம் தியாகி ஆறுமுகமாக மக்களுக்காக மண்ணில் சாய்ந்தார். அன்று மதியமே சாம்பவனோடை சிவராமன் நாட்டுச்சாலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். மூன்று பேர்களையும் ட்ராக்டரில் ஏற்றி இலை தழைகளை போட்டு மறைத்து ஊரில் மக்களுக்கும் மற்றும் தோழர்கள் யாருக்கும் தெரியாமல் கொண்டுபோய் பட்டுக்கோட்டை சுடுகாட்டில் மூன்று பேரையும் ஒரே இடத்தில் புதைத்தது வெள்ளை ஏகாதிபத்திய அரசு.
இதில் தப்பி பிழைத்தவர்தான் தோழர் எஸ். ஏ. எம்.
இவர் தலைமறைவாக இருந்தபோது அவருடைய அத்தை இறந்துவிட்டார். இதற்கு எப்படியும் எஸ். ஏ. எம் வருவார் என்று காவல்துறை கங்கணம் கட்டிக்கொண்டு காத்திருந்தது. அதேபோல் தோழர்களின் மூலமாக கேள்விப்பட்டு வந்த எஸ். ஏ. எம் அவர்களை ஆம்பலாப்பட்டு தெற்கு, வடக்கு, கரம்பயம், மில்முக்கம், சாவடி என முகாமிட்டு இருந்த காவல்துறையினர் ஆம்பலாபட்டு வடக்கின் மத்தியப் பகுதியில் தன்னை சூசகமாக சுற்றி வளைத்ததை அறிந்த தோழர் தன்னைத்தானே சுதாரித்துக்கொண்டு அப்பகுதியில் உள்ள அய்யாவு வீட்டில் தஞ்சம் அடைந்தார். இரவு முழுவதும் அந்த வீட்டுக்காரர்கள் இவரை பாதுகாப்பாக வைத்திருந்து பின்னர் காவல்துறை அசந்து கலைந்த நேரம் பார்த்து அனுப்பி வைத்தனர். பின்பு அடக்குமுறை கொடுங்காலம் முடிந்த பின்பு தோழருக்கு பெண் கொடுக்க பல நெருங்கிய உறவுக்கார்கள் முன் வந்தபோது அவர்களின் பகைக்கு ஆளாகி அடக்குமுறைக் காலத்தில் தன்னை எதேச்சையாக காவல்துறைக்கு எந்த பயமும் இல்லாமல் தன்னை பாதுகாத்தவர்களின் வீட்டில் இருந்த அந்த இளம் பெண்ணை அவர் வாழ்நாள் துணைவியாக ஏற்றுக்கொண்டார் என்பது அவர் பொதுவுடைமை கால போராட்ட வரலாறு போலவே முக்கியமான நிகழ்வாகும்.
1946-ல் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் நடந்த "காடா மண்ணெண்ணைய் மானியம்" கேட்டு மிகப்பெரிய போராட்டம் இவர் தலைமையில் பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. இதன்மூலம் இவர் இப்பகுதியில் எல்லோரும் தெரியும் அளவுக்கு மிகப்பெரிய தலைவராக உருவெடுத்தார்
1965-ல் இருந்து தொடர்ந்து இரண்டு முறை ஆம்பலாபட்டு தெற்கு ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்றாவது முறையாக அரசே அவருக்கு ஊராட்சி மன்ற தலைவராக பதவி நீட்டிப்பு காலம் கொடுத்தாக அவருடைய மகன் கோசிமின் (எ) அண்ணாமலை கூறுகின்றார். இந்தக் காலகட்டங்களில் ஆம்பலாப்பட்டு பகுதிகளில் பெரும்பாலும் இரவில்தான் திருமணங்கள் நடைபெறும். பெரியார் வழியில் வந்த எஸ். ஏ. எம் பின்பு கம்யூனிஸ்ட் இயக்க கொள்கையால் ஈர்க்கப்பட்ட இவர் சீர்திருத்த முறையில் பல இரவுத் திருமணங்களை இவர் தலைமையில் நடைபெற்றது நடத்தியும் வைத்துள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி துவக்கிய போது முதல் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினராக இருந்துள்ளார். அப்போது பட்டுக்கோட்டை, திருவோணம், ஒரத்தநாடு உள்பட ஒரே பகுதியாக இருந்தபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார செயலாளராக இருந்து மக்கள் பணியாற்றி உள்ளார். கட்சியின் மாநிலக் குழுவில் ஆறு ஆண்டு காலம் உறுப்பினராக இருந்துள்ளார்.
இவரின் இயக்க கள நண்பர்களாக தியாகி அறிமுகம், ரங்கசாமி, மு. சுப்பையன், மா. சுப்பையன், வே. அ. சுப்பையன், R.G. ராஜன், காசிநாதன் போன்றோர்களாவர். இயக்கத்தின் முன்னோடி தலைவர்களான என். சங்கரய்யா, ஆர். என். நல்லக்கண்ணு, மணலி கந்தசாமி, கலப்பால் குப்பு, ஏ. எம். கோபு இன்னும் ஏராளமான தோழர்கள் இவருக்கு அரசியல் களத்தில் நண்பர்களாக இருந்துள்ளனர். கட்சி முடிவு செய்து நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக ஏழு ஆண்டுகள் அரசால் சிறை தண்டனை பெற்றார். பின்பு அது நான்கரை ஆண்டுகளாக குறைக்கப்பட்டு விடுதலையானார்.
சோவியத் யூனியன் வீக்லி, ஜனசக்தி, தீக்கதிர், தினமணி போன்ற இதழ்களை வீட்டிற்கு தபாலில் வரவழைத்து முறையாக தினமும் பத்திரிக்கை படிப்பவராக இருந்தார்.
தஞ்சை பகுதிகளிலும், கீழத் தஞ்சையிலும் நடந்த சாணிப்பால், சவுக்கடிக்கு எதிராக பல போராட்டங்களில் கலந்துகொண்டு வழி நடத்தியவர். அதேபோல் ஆம்பலாப்பட்டு பகுதிகளில் நடந்த விவசாய கூலித் தொழிலாளர்களின் பிரச்னை, ஆதிக்க குடிகளுக்கு அடுப்பு போடுதல், துக்கச் செய்தி சொல்லப் போகுதல், தலித் தெருக்களில் யாராவது இறந்துவிட்டால் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு வழியில் இரண்டு பக்கமும் நின்று காலில் விழுந்து வணங்குதல், கம்கட்டிக்குள் வைத்த துண்டை தோளில் போடு, முழங்காலுக்கு மேல் கட்டிய வேட்டியை கரடுதரிக்க கட்டு, செருப்பு அணி, ரவிக்கை அணி என்று தைரியமூட்டி அனைவரையும் செய்ய வைத்தார். மேலும் இப்பகுதிகளில் நடந்த வன்கொடுமைகளுக்காகவும், இரட்டைக் குவளை முறை ஒழிப்பு என பல போராட்டங்களை முன்னெடுத்து வெற்றி கண்டவர். விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு வேலைக்கேற்ற கூலி கொடுக்க வேண்டும். ’கூலி கொடுக்கின்றோம்’ என்ற பெயரில் அவர்களின் உழைப்பைச் சுரண்டக்கூடாது. ஒருநாளைக்கு எட்டு மணி நேரம்தான் வேலை செய்யவேண்டும் என்கிற நடைமுறையைச் செயல்படுத்தியவர்.
தோழர் எஸ். ஏ. எம் அவர்கள் 15.01.1927-ல் சா. அண்ணாமலைக்கும், செல்லத்தம்மாளுக்கும் ஒரே செல்லப் பிள்ளையாகப் பிறந்தார். தோழரின் மனைவி பிச்சையம்மாள். இவர்களுக்கு அசோகன், மகேந்திரன், சாமிநாதன், செல்லநாயகி, கோசிமின்(எ)அண்ணாமலை, கண்ணன் என்று ஆறு பிள்ளைகள். தோழரைப் போலவே அவரது பிள்ளைகளும் அவர் சார்ந்திருந்த இடதுசாரி இயக்கத்தில் இருந்து இன்றும் பணியாற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். இவரது மகளை திருமணம் செய்துகொடுத்த மருமகனும் இடதுசாரி இயக்கத்தில்தான் உள்ளார். தோழருக்குப் பிறகு அவரது மகன் மகேந்திரன் ஆம்பலாப்பட்டு தெற்கு ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார்.
ஆம்பலாப்பட்டு தெற்கு ஊராட்சியில் ஆரம்ப காலத்தில் மக்கள் வாழ்வதற்கான அடிப்படை கள வேலைகள் செய்து கிராமத்தை புனரமைத்த முக்கிய தலைவர்களுள் எஸ். ஏ. எம் அவர்களும் ஒருவர். எல்லோருக்கும் உதவி செய்யக் கூடிய அர்ப்பணிப்பு உணர்வு கொண்டவர். வயது வித்தியாசம் இல்லாமல் வர்க்கச் சிந்தனையோடு பேசிப் பழகக்கூடிய இனிய தோழர் எஸ். ஏ. முருகையன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக 04.06.2021 அன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. தோழர் உங்கள் சிவப்பு சிந்தனைச் சிறகுகளை எங்களிடம் ஒப்படைத்து விட்டு சென்றிருக்கின்றீர்கள் அந்தச் சிறகுகளோடு உங்கள் வழியில் நாங்கள் பயணிப்போம்… !
செவ்வணக்கம் தோழா !..
கட்டுரையாளர்
எழுத்தாளர்
ஆம்பல் தி. காமராஜ்