நிகழில் வறுமையைவிட அரசியல்தான் கொடுமையாக இருக்கின்றது. துயரங்களின் தொடர்ச்சியாக இப்போது மாடு மற்றும் மாட்டுக்கறி தொடர்பான பிரச்னைகள். அரசர்காலத்தில் மக்கள் மீதான வரிவிதிப்புகளுக்கும் இப்போதான காலகட்டத்தில் மக்கள் மீதான வரி விதிப்புகளுக்கும் ஆறு வித்தியாசங்கள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
வரி ஏற்றத்தில் மக்கள் அவதிகளுக்குள்ளாகப்போகும் இந்த கொந்தளிப்பை மறைக்கும் பொருட்டு அல்லது அதன்மீதான கவனத்தை திசை திருப்பும்வண்ணம் மாடு சம்பத்தப்பட்ட கரிசனங்கள். இதன்மீது அலாதி பிரக்ஞை கொள்ளும் யாரும் மாடுகள் வளர்ப்பதாக தெரியவில்லை. மீறி நடந்தால் மகிழ்ச்சி. ”வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்” என்ற வார்த்தை அளவிலான வாசகம்போல, ”வீட்டுக்கு ஒரு மாடு வளர்ப்போம்” என்று சட்டம் மூலம் நிர்பந்தித்தால் நல்லது. நகர்புற வாழ்க்கை முறையில் மாடு வளர்ப்பது நாகரிகத்திற்கு உகந்தது அல்ல. மாட்டைப் பற்றியான முழு கவலைகளும் மாடுவளர்ப்பவர்கள் மற்றும் அதோடு வாழ்ந்து பராமரிப்பவர்களுக்கு போகட்டும். ஒருவன் உண்ணும் உணவை வைத்து அவன் ஜாதியை கண்டுகொள்ளும் கேவலமான ஒரு சமுகச் சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
நாம் கடவுளை மரங்களில் மண்ணில், வின்னில், காற்றில், கல்லில் கத்தரிக்காயில் தேடி, இப்போது மாட்டில் வந்து நிற்கிறோம். மாட்டு மூத்திரத்தைக் குடிக்கும் அளவுக்கு நம் நம்பிக்கையின் அடர்த்தி மற்றும் பரப்பு விரிந்திருக்கின்றது. அதற்கு ஒரு விஞ்ஞான விளக்கம் வேறு. சமீபகாலத்தில் புதிதாக ஒன்று கிளம்பியிருக்கிறது. பழைய முட்டாள்தனங்களுக்கு, அடக்குமுறைகளுக்கு புதியபுதிய விஞ்ஞான விளக்கம் ஒன்றை கற்பிப்பது. மனிதபலவீனம் இன்னும் எதையெல்லாம் கடவுளாக்கி நம்மை அச்சுறுத்துமோ அனுமானிக்க முடியவில்லை.
நம் நாட்டில் கால்வாசி பேர் இரண்டுவேளை பட்டினி கிடக்கிறார்கள். குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. கவனத்தை அதன் தீர்வு நோக்கி செலுத்தாமல் கறி அரசியலை தூண்டிவிட்டு கடல் கடந்து சென்றால் இது எப்படி நல்ல ஏற்பாடு என்று கொள்ளப்படும். மக்களின் அடிப்படை பிரச்னைகள் ஏதாவதொன்றில் மூக்கை நுழைத்துவிட்டு, கிளம்பி வெளிநாடு சென்றுவிடுவது. மக்கள் போராடுவது;. கொந்தளிப்பது; தன்னைத்தானே சமாளித்துக்கொள்வது. இது தொடர் நிகழ்வாக உள்ளது. இந்த ஆட்சி வந்த மூன்றாண்டு காலத்தில் மக்கள் நிம்மதியாக வாழ்ந்ததாக தெரியவில்லை. கல்வியும் மருத்துவமும் எளிதாக கிடைக்க வழிவகை செய்யாத எந்த அரசாங்கமும் மற்ற எதன்மீது கவனம் செலுத்தியும் தக்க பலனை அறுவடை செய்யாது. மாற்றாக பின்னடைவுகளைதான் சந்திக்க நேரிடும் என்பது என் துணிபு.
அ.கென்னடி