வினா விடை  24-02-2017

கீழ்க்கண்டவற்றில் எவையேனும் மூன்று வினாக்களுக்கு விரிவாக விடையளிக்கவும்.

1.ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் உணர்வுகள் குறித்து எழுதுக

2.இன்று நள்ளிரவு முதல் ’பணம் செல்லாது’ என்று அறிவிக்கப்பட்டால் என்னவாகும்?

3.பண்பாடு, கலாச்சாரம் இவைகள் பற்றி தெரிந்தவற்றை எழுதுக

4.தற்போதைய தமிழக அரசியல் சூழல் எவ்வாறு இருப்பதாக நினைக்கிறீர்கள்?

1.ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் உணர்வுகள் குறித்து எழுதுக

சமூக புறவெளி கொடுக்கும் அழுத்தங்களையும், தனக்கான சுய, தொடர் பிரச்னைகளையும் ஒரு மனிதன் எவ்வளவுதான் தாங்கிக்கொள்ளமுடியும். எதற்கெல்லாம் கண்டும் காணாமலும் சகித்துக்கொண்டும் போகமுடியும். பீலிப்பெய் சாகடும் அச்சிறும். உணவுப்பாதையில் தவறு நடந்தால் பொறையேறும். உணர்வுப் பாதையில் தவறு நடந்தால் வெடித்துக் கிளம்பி இனியொரு விதி செய்வதைத் தவிர, வேறு என்ன வழி இருக்கமுடியும்.

சமீபமாக மக்களின் உணர்வுகள்மீதும் உரிமைகள் மீதும் மிதமிஞ்சிய மூர்க்கத் தனமான தாக்குதல்கள்… இலங்கையில் தமிழர்கள் படுகொலை, ஆந்திராவில் தமிழர்கள் படுகொலை, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொலை, வியாபம் ஊழல், மாட்டுக்கறி அரசியல், முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் சாவில் மர்மங்கள், உயர் மதிப்பு கொண்ட பணம் செல்லாது என்ற அறிவிப்பு, வார்தா புயல், காவிரி நீர் பிரச்சினையில் தமிழர்கள் தாக்கப்பட்டது, நியூட்ரினோ, தூத்துக்குடி அணு உலை நிர்மானம், கெய்ல், கேரளா ஆந்திரா கர்நாடக தேச அரசுகள், நதிகள் குறுக்கில் அணைகள் எழுப்ப முயல்வது மற்றும் எழுப்புவது, மீத்தேன் … இப்படி நீட்சியாக இடைவிடாத இன்னல்கள் நிகந்தவண்ணம் இருக்கிறது. கொதித்தெழுந்து வீதிக்கு வர தயாராக இருந்தாலும் ஏதோ ஒரு கட்சி வழிகாட்டுதலில் நமக்கு உடன்பாடில்லை. கட்சிகள் யோக்கிதையற்றது. போராட்ட கருவை முன்னிருத்தி வரலாமென்று நினைத்தால் இனம், மதம் இப்படி ஏதாவது ஒன்றின் குறுக்கீடுகள், இந்தச் சூழலில் கலாச்சாரம் ஒன்றுதான் எல்லாருக்கும் பொதுவானது. ஒவ்வொருவரின் ஒட்டுமொத்த கோபங்களை வெளிக்காட்டுவது, பொது வெளியில் கூடுவது, அனைத்தின் மேலும் பிரக்ஞை கொள்வது அனைத்திற்குமாக இது உகந்ததாக உள்ளது. அதைவிட சங்கமிக்கும் இடம் அனைவருக்கும் ஏற்புடையதாக உள்ள கடற்கரை. போராட்ட களங்களில் ஜல்லிக்கட்டுக்கான கோஷங்கள் ஒருபுறமிருக்க, அனைத்துக்குமான வெளிப்பாடுகள் கோஷங்களாக, பதாகைகளாக, வாசக பலகையாக இருந்தன என்பது வெளிப்படை. இதில் அற்புதமான விஷயமே கட்சிகள் வழிகாட்டாததே எனக் கொள்க. மற்றபடி ஏதாவது ஒரு நொடியில் நாம் வெடித்தாகவேண்டும் என்ற நிலை பல்வேறு மட்டங்களில் உருவாக்கப்பட்டது. அதற்கு சமூக வலைதளங்கள் மிக முக்கிய பங்களிப்பை செய்தது. அதுவே உலகம் முழுக்க எதிரொலித்தது.

எத்தனை நெகிழ்வான காட்சிகள். களங்கமற்ற போராட்ட உணர்வுகளை மதித்தே ஆகவேண்டும். உலகம் வியக்கும் மாபெரும் போராட்டக் கலமாக தமிழகம் காணப்பெற்றது. உலகத்திற்கே காட்டாக அமைந்தது.  வரவேற்கவேண்டியது.

களம் கண்ட யாவருக்கும் வாழ்த்துகள்.

2.இன்று நள்ளிரவு முதல் பணம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டால் என்னவாகும்?

முதலில் அனைவரும் பத்து ரிக்டர் அளவிற்கு அதிர்ச்சியாவார்கள். இந்த மன அதிர்ச்சியிலிருந்து கையிருப்பு எதுவும் இல்லாத அன்றாடம் காய்ச்சிகள் எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பிக்கக் கூடும். அது அரசாங்கம் அவர்களுக்கு அளித்த பரிசு என்றும் சொல்லலாம். தம் வாழ்நாளில் நல்ல வழியிலோ, கெட்ட வழியிலோ சம்பாதித்த அனைவரும் இதற்காகவா இத்தனைநாள் பாடுபட்டோம் என்றும் கொந்தளிப்பார்கள். அரசாங்கத்தை எவ்வளவு கேவலமாக திட்டமுடியுமோ திட்டுவார்கள். மண்ணை வாரி இறைப்பார்கள். இந்திய அரசாங்கத்தைவிட அதிகமாக பணம் வைத்திருப்பவர்கள் அறிவித்த, அடுத்த நொடி, ஜாதி என்று வரும்போது ஒன்று கூடுவதுபோல் கூடுவார்கள். ’அரசாங்கத்தைச் செல்லாது’ என்று அறிவிக்க முன்முயற்சி எடுப்பார்கள். அரசாங்கம் அதிகப்படியான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.

வங்கிகள் அனைத்தும் மூடப்படும். அதில் கணிசமான மக்கள் வேலை இழப்பார்கள். பணம் அச்சடிப்பு நிறுத்தப்படும், வெளிநாட்டு மூலதனம் வருவது முதலீடு செய்வது அனைத்தும் நின்றுவிடும் நிலை உருவாகும். கணக்கில் மற்றும் கண்களில் காட்டாமல் கட்டுக்கட்டாக சேமித்து வைத்திருந்த பணம் யாவும் சாலை ஓரங்களிலோ, குப்பைகளிலோ கிடக்கலாம். கொழுத்தப்படலாம். குழந்தைகள் விளையாடவோ, வேர்கடலை சுண்டல் மடிக்கவோ பயன்படலாம். ஐடி நிறுவனங்கள், பெரு. சிறு முதலீட்டு நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் யாவும் இழுத்து மூடப்படலாம். வெளிநாட்டவர்கள் வருகை குறையும்.

நிலங்களை பிளாட் போட்டு விற்பனை செய்தவர்கள் நிறுத்திக்கொள்வார்கள். அந்த நிலங்கள் பாதுகாக்கப்படும். பண்டமாற்றுகள் பெருகும்.சிறு வியபாரிகள் பிழைத்துக்கொள்ளலாம். வெயில் மழை இவைகள் சரியாக உணரப்படும்.  ஏடிஎம் மையங்கள் பண்டமாற்று கடைகளாகும். பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் உணவு தானியங்கள் வெளியில் சொல்லாமல் பாதுக்காப்படும் அல்லது வெளியில் வரும். திருட்டுகள் வழிப்பறிகள் மிகுந்து போகலாம். உணவு சம்பந்தபட்ட திருட்டுகள் அதிகரிக்கலாம். ஆட்கள் கடத்தப்பட்டு அதற்கு சன்மானமாக உணவு தானியப் பொருட்களைக் கேட்க நேரிடலாம். லஞ்சமாக உணவுப்பொருட்கள் பெறப்படலாம். ஹோட்டலில் வேலை செய்வது மரியாதைக்குரிய தொழிலாக ஆகும். வேளாண் பல்கலைக் கழகம், தோட்டகலை படிப்பு, ஹோட்டல் மேனேஜ்மெண்ட் இதுபோன்றவை இந்தியாவின் உயரிய படிப்பாக கருதப்படலாம். மூலிகை மருத்துவம் முதன்மை அடையலாம்.

விவசாயிகளிடம் கார்களைக் கொடுத்து, விளை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பெற்றுக்கொள்ளப் படலாம். கம்ப்யூட்டர்களைக் கொடுத்து கறி, மீன்கள் வாங்கிக்கொள்ளப்படலாம். ஒரு கட்டத்தில் அவர்களும் ’வேண்டாம்’ என்று மறுதளிக்கும் சூழல்வரின் ஜாதி மதம் என்று பாராமல், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பாராமல் அனைவரும் விவாசாயம் செய்வதற்கோ அல்லது விவசாயக் கூலியாகவோ வரும் சம்பவமும் நிகழலாம்.

விவசாயம் செழித்து நிற்கும். நதிகள் இணைப்புகள் குறித்த அக்கறை மேலோங்கும். நீர் மேலாண்மை சம்பந்தமான புரிதல்கள் உண்டாகும். நாடு தலை நிமிரும்.

3.பண்பாடு, கலாச்சாரம் இவைகள் பற்றி தெரிந்தவற்றை எழுதுக

மொழி அழிப்பது கலாச்சாரம் அழிப்பது, தொன்மம் அழிப்பது, தம்மை அழிப்பது என்பதாக கொள்ளப்படுகிறது. காலகாலமாக கடைபிடித்து ஒழுகிவரும் ஒரு முறமையின் மீது தொடுக்கப்படும் அம்புகள், கலாச்சாரம் பண்பாடுகளுக்கு எதிரானது என்பதாகிறது.

நாம் வாழ்ந்த வாழ்க்கையின் சாரங்களை நாம் வழிவழியாக வந்தவர்கள் மூலமாக அறிகிறோம். கலைகளின் மூலம், கல்வெட்டுகள் மூலம், ஓலைச்சுவடிகள் மூலம், புத்தகங்களின் மூலம் அறிகிறோம். ஆதி காலங்களில் ஒழுங்கமைவு இல்லாமல் வாழ்ந்த மக்கள் கூட்டம் மெல்ல மெல்ல அறிவு சார்ந்து சிந்தித்து ஒரு பண்படுத்தப்பட்ட ஒரு வாழ்வியல் நிலைபாட்டுக்கு வருகிறார்கள். அதைப் பொதுமையாக்கி, நெறிமுறைப்படுத்தி அதன் வழி ஒழுக ஆரம்பிக்கிறார்கள். இது நீதோஷ்ண நிலை, புவியியல் தன்மை இதற்கு ஏற்றாற்போல மாறிக்கொண்டே நீள்கிறது.

ஒவ்வொரு மக்கள் திரளுக்கும் ஒரு விதமான கலாச்சாரம் பண்பாடு மொழி உணவு. வீரம், விளையாட்டு, கலைவடிவங்கள், நம்பிக்கை தொடர்பான அம்சங்கள்,. உறவுகள் அடிப்படையிலான ஏற்பாடுகள் ஆகியன உண்டு; அனைத்திற்கும் பாரம்பரியங்கள் உண்டு. ஒன்றினை தூக்கிப் பிடிப்பதற்கு பாரம்பரியங்களே முக்கிய துணை புரிகிறது.

தமிழர்களுக்கான பண்பாடு கலாச்சாரங்களுக்கு தொன்மையான வரலாறு இருக்கிறது. அகில உலகம் இன்றளவும் ஆச்சியப்படும்படியானது அது. அறிவு சார்ந்த வாழ்வியல் தேவைகளுக்கான கண்டுபிடிப்புகள், ஆன்மிகம், சட்டம், சமயம், உறவுகள் பேணுதல், மருத்துவம், போர் முறைகள் அனைத்திலும் ஆச்சரியங்கள் மலிந்து கிடக்கிறது. வாழ்க்கையை மிக நேர்த்தியாக  ஆதியிலேயே வடிவமைத்திருக்கிறார்கள்.

அப்போதே இவர்கள் பண்பட்டிருக்கிறார்கள். பக்குவம் பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். ஊடாக அவ்வப்போது கலாச்சாரங்கள்மீது தாக்குதல்கள் நிகழ்ந்தவண்ணம் இருந்திருக்கிறது. அதையெல்லாம் தாக்குப்பிடித்து முன்னேறி வந்திருக்கிறது.

கலாச்சாரம் பின்னடைவுகளைச் சந்திப்பதும் மீண்டும் புத்துயிர் கொள்வதுமாக இருந்திருக்கிறது. இதை எச்சூழலிலும் நீர்த்துப்போக செய்ய முடியாது. இன்றளவும் தமிழர்களின் பண்பாட்டு மிச்சங்களாக அகல்வாராய்ச்சிகளில் அநேக ஆதாரங்கள் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது.

சமீபத்தில் ஏறுதழுதல் மீதான தடை என்பது கூட கலாச்சாரத்தின் மீதான தாக்குதலாகவே கொள்ளப்பட்டது. அதை மீட்டெடுக்க மக்கள் திரளுடன் கூடிய ஒரு அளாவிய போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் உண்டாக்கப் பட்டது. சமகாலத்தில் நம் பண்பாட்டின் விழுமியங்களாக இருந்த கலை வடிவங்கள் ,உணவு முறைகள், மருத்துவ முறைகள், வாழ்க்கை முறைகள் அனைத்திலும் நமக்கு தெரிந்தும் தெரியாமலும் நுட்பமான மெல்லிய தாக்குதல்கள் நடந்த வண்ணம் இருக்கத்தான் செய்கிறது. அது கண்டுபிடிக்கப்பட்டு பாதுக்காக்கப்படவேண்டும். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நாமும் பண்பாட்டு கலாச்சார விஷயங்களை பாதுகாத்துக் கொடுத்தாகவேண்டும்.

4.தற்போதைய தமிழக அரசியல் சூழல் எவ்வாறு இருப்பதாக நினைக்கிறீர்கள்?

சாய்ஸ்ல எந்தக் கேள்வியை விடலாம் என்று யோசிக்கும்போது பதில் எழுத வக்கற்ற கேள்வியாக, மேற்காணும் கேள்வியை சாய்ஸில் விட்டுவிட்டேன்.

 

.கென்னடி