பல்லவி
எங்க போயி பிச்சை எடுப்போம்
மூனுவேளை சோத்துக்கு
இங்க வந்து தொளை போடுறான்
மீத்தேன் என்னும் காத்துக்கு
நல்லது நீ செய்யவேண்டாம்
போதும்டா சாமி
கெட்டதே நீ செய்யாதடா
கெடக்கட்டும் என் பூமி
(எங்க போயி பிச்சை…)
சரணம் 1
தண்ணி மட்டம் கீழேபோவும்
தாகத்துக்கு என்ன வழி
எண்ணி பத்து வருஷத்துக்குள்
பூமி ஆவும் பொட்டல்வெளி
நாலடிக்கு தரை இறங்கும்
பூமி அதிர்ச்சி ஆவும்
காலடியில் கெடந்த சொர்க்கம்
வீணா களவு போவும்
உப்பு தண்ணி உள்ளே வரும்
உவரு மண்ணா மாறும்
அப்ப குந்தி அழுதா என்ன
தீர்வு வந்தா சேரும்
ஆக்க நாங்க விடமாட்டோம்
இங்க ஒரு சோமாலியா
ஆடுறத கொறச்சிக்குங்க
நாங்க என்ன கோமாளியா
(எங்க போயி பிச்சை…)
சரணம் 2
நம்ம மண்ணை குறிவச்சி
காலி பண்ணும் அவனை
கண்ணுமுன்ன தொரத்தி அடி
தேவையில்லை தவணை
புல்லு பூண்டு மொளைக்ககூட
லாயக்கில்லாம போவும்
நெல்லு கம்பு வெளைஞ்சதெல்லாம்
கனவுபோல ஆவும்
நாரை கொக்கு குருவியெல்லாம்
ஆடிபாடி மறக்கும்
புல்லு பூவும் பூத்து எங்கும்
மகரந்தங்கள் பறக்கும்
எல்லாத்தையும் எழந்துபுட்டு
எங்க நாங்க போக
என்ன பாவம் செஞ்சோம்டா
பட்டினி பசியில் சாக
(எங்க போயி பிச்சை…)
சரணம் 3
நான் தேனு எடுத்த மண்ணில்
மீத்தேன எடுத்து
கைநெறைய காசு ஈட்டு
அயலான்கிட்ட கொடுத்து
மண் வளத்தை எடுத்துபுட்டா
மகசூல் தெரண்டு வருமா
பொன் வெளைஞ்ச பூமி பின்ன
பழைய வருவாய் தருமா
கண்ணைமூடி கெடந்தோம்னா
பாழப் போவும் மண்ணு
ஒன்னுக்கூடி போராடணும்
ஓரணில் நின்னு
ஒன்னுகூட வேண்டுகோளை
வலைதளத்தில் பரப்பி
மண்ணுக்கான போராட்டத்தில்
ஒன்னுக்கூடி சிறப்பி
(எங்க போயி பிச்சை…)
அ.கென்னடி