”உன்
தாவணியைக்கொண்டு குளத்தில்
வலை வீசுகிறாய்
விரும்பி வந்து விழுகிறது
மீன்கள் ”
மணற்கொள்ளை மாதிரி மனசைக் கொள்ளை அடிக்கும் மந்திரங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது தாவணி.
வயதுக்கு வந்த பெண்களுக்கான முதல் பாவாடை தாவணி தாய்மாமன் கையால் கொடுக்கப்பட்டதாக இருக்கும். அந்தப் பாவாடையின் சொரசொரப்பு தாவணியில் எதிரொலிக்கும். அந்த அதிர்வு தெருவைத் திரும்பிப்பார்க்க வைக்கும். தாவணி எந்தப் பிடிவாதமுடைய ஆணையும் கிறங்கடிக்கும் வல்லமைக் கொண்டது.
ஏறக்குறைய கவிஞர்களுக்கு இது பாடுபொருள்.
இந்த உடைகள் வயதுக்கு வந்த பின்னும் திருமணத்திற்கு முன்னும் அணியும் வகையைச் சார்ந்தது. திருமணம் ஆகாமல் வயது முதிர்ந்த பின்னும் அதை அணிந்திருந்தால் அவள் முதிர்கன்னி என்றே சமூகத்தால் பார்க்கப்படுகிறாள்.
சிறுமியாக இருந்த ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டாள் என்பதை சமூக வெளிக்குத் தெரியப்படுத்தவும் இந்த உடை துணைபுரிகிறது. எந்த ஆடைகளுக்கும் இல்லாத இடம் இதற்கு உள்ளது; அது மிக நல்லது.
ஒரு பெண் வயதுக்கு வந்ததும் முதன்முதல் பாவாடை தாவணி அணிந்துகொண்டு கண்ணாடிமுன் நிற்கும்போது வெளிப்படுவதுதான் முழுவெட்கம்.
மழை பெய்யும்போது மண்ணின் சரிவும் மருதாணிபோடும்போது தாவணியின் சரிவும் தவிர்க்க முடியாது. அவை இரண்டும் இயற்கை சம்பந்தப்பட்டது.
சரியாத தாவணியை ஒருத்தி சரிசெய்துகொண்டே இருக்கிறாள் என்றாள் அவள் கண்களுக்கு எட்டும் தூரத்தில் அவளுக்குப் பிடித்தவன் அல்லது காதலன் நிற்கிறான் என்று தெரிந்துக்கொள்ளலாம் அல்லது புரிந்துக்கொள்ளலாம். சரிகிற தாவணியை அவர்கள் சரிசெய்கிற லாவகத்தை யாராலும் சரியாக சொல்லவே முடியாது; அப்படிச் சொல்ல நினைத்தாலும் சரியாக வராது; அதையும் சொல்லி தப்பாக ஆகிவிட்டால் சரிகட்டவே முடியாது.
பெரும்பாலும் தாவணிக் கனவுகளுக்கு எதிர்பார்ப்புகளும் ஏக்கங்களும் அதிகமாகவே இருக்கும். ஆனால், சில பெண்களுக்கு தாவணியே கனவாக இருக்கும். இந்தப் பாவடை சட்டையை எப்போது தாண்டிப்போவது என்கிற ஏக்கம் அவர்கள் கண்களில் தெரியும்.
தாவணிக்கு மேல் ஒரு தங்கத்தாமரை பூ செயின் கிடந்தால் அது பணக்கார தாவணி. தாவணிக்கு மேல் திருவிழாக்களில் விற்கும் மணிமாலை கிடந்தால் அது ஏழை தாவணி. அதுவே பழைய சேலையில் கிழிக்கப்பட்டதாக இருந்தால் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள தாவணி. இப்படி தாவணிகளை வைத்து ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தைச் சொல்லிவிடலாம்.
செடி கொடிகளில் பூக்கமுடியாத பூக்களெல்லாம் பாவாடையில் பார்த்திருக்கிறேன். அப்படிப் பூப்போட்ட பாவாடையையும் தாவணியையும் ஒரு பெண் உடுத்திக்கொண்டு தெருவில் வந்தால், ஒரு பூங்கா நடந்துபோவது போன்று இருக்கும். இப்போதெல்லாம் நடந்து போகும் பூங்காக்களைப் பார்க்கவே முடிவதில்லை.
பருவப் பெண்களின் அழகை தேவைக்கேற்ப மிகைப்படுத்தி, அதைச் சரியாக வகைப்படுத்துகிற சாமர்த்தியம் தாவணிகளுக்கு மட்டுமே உண்டு. மார்பை தழுவுகிற உரிமையை பெண்கள் தாவணிக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
மற்ற உடைகள் மாதிரி தாவணிகளுக்கு மூடி மறைக்கத் தெரியாது. வெளிப்படையாகவே இருக்கும். அந்த வகையில் அனைத்து வண்ண தாவணிகளுக்கும் வெள்ளை மனசுதான். தாவணி இல்லாத சமூகத்தை ஊருணி இல்லாத கிராமமாகப் பார்க்கிறேன். மண் மனம் மாறாத தாவணியின் குடியைக் கெடுத்ததே சுடிதார்தான். வயிரு எரிஞ்சி சொல்றேன் அது நல்லாவே இருக்காது.
தாவணி என்பதின் விளக்கத்தை தமிழ் அகராதியில் தேடினால், “இளம் பெண்கள் மார்பில் அணிந்துகொள்ளும் ஒரு சுற்றே வரக்கூடிய, புடவையில் பாதி நீளம் மட்டுமே இருக்கும் ஆடை” என்று உள்ளது. ரொம்ப அகராதிதான் அகராதிக்கு. சுறுக்கமாக இல்லை மற்றும் நேரடியாக இல்லை. மிகவும் எளிமையாக இப்படிச் சொல்லலாம்… வாலிப தேசத்தின் தேசியக்கொடி.
பிற மாநில, நாட்டு கலாச்சாரங்கள் நம் கல்வி, உணவு, உடைகளில் ஆதிக்கம் செலுத்தினாலும் தாவணி மீது தொடுக்கப்பட்ட அம்புகளின் முனைகள் பெரும்பாலும் மலுங்கித்தான் போயிருக்கிறது. அத்தனை ஸ்திரத்தன்மை கொண்டது.
”ஆத்தா நான் பாஸாயிட்டேன்...” என்று சந்தோஷ கூக்குரலோடு ஓடிவரும் மயிலின் தாவணியை யாராலும் மறக்கமுடியுமா?
நூறுபேர் கூட்டமாக நின்றாலும் தாவணியில் ஒரு பெண் நிற்கிறாள் என்றால் அதுதான் கண்களில் முதலில் படும். ஒரு பெண்ணுக்கு மூன்று நிலைகளுக்கு ஏற்ப உடைகளை வகுத்து வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். வயதுக்கு வரும்முன் பாவாடை சட்டை, வயதுக்கு வந்தபின் பாவாடை தாவணி, திருமணத்திற்குப் பின் சேலை முன்னோர்கள் ரசிகத்தன்மை வாய்ந்தவர்கள்.
அணிந்திருக்கும் தாவணி தரும் கவர்ச்சியைவிட, அவ்வப்போது விலகாத தாவணியை விரல்களால் அனிச்சையாக சரி செய்யும்போதுதான் அதைப் பார்க்கும் ஆண்கள் கலைந்து போகிறார்கள். இருபது வருடங்களுக்கு முன் வயது பெண்களிடம் மயில் பாவாடை பிரசித்தம். அதை அணிந்துக்கொண்டு ஒரு பெண் நடந்துபோனால் ஆண் மயில்கள் அவள் கால்களைச் சுற்றிச் சுற்றி தொடர்வதுபோல இருக்கும்.
வீட்டில் அமர்ந்து ஆடவன் படித்துக்கொண்டிருக்கிறான். அப்போது அவன் காதலி தாவணி உடுத்திக்கொண்டு வந்து இவன் முன் நிற்கிறாள். இருவரும் ஒருவரை ஒருவர் ரகசியமாக பார்த்துக்கொள்கின்றனர். அவள், அவனுக்கு முன் அவளுடை தாவணியைச் சரிசெய்கிறாள். இவன் கவனம் சிதறுகிறான் என்பதை இப்படி எழுதுகிறார் பாரதிதாசன்.
”ஆடை திருத்தி நின்றாள் அவள்தான் - இவன்
ஆயிரம் ஏடு திருப்புகின்றான்”.
உன்னோடு ஒட்டிக்கிடப்பதில் அத்தனைப் பிரியம் கொள்கிறது உடைகள். வயது ஏற ஏற சில ஆடைகளைத் தவிர்க்கிறாய். தாவணிமீது பாவாடை சட்டைக்குக் கோபம். சேலைமீது தாவணி பாவாடைக்குக் கோபம். உன் உடையையும் இடையையும் அதிகம் ரசிக்க வைத்தது நீ அணிந்திருக்கும் தாவணிதான்.
எனக்குள் நல்லவன், கெட்டவன், கொடூரமானவன், குரூரமானவன்... இப்படி பல குணங்கள் இருக்கிறது. உன்னை பாவாடை தாவணியில் பார்க்கும்போதெல்லாம் உன்னையே விடாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். எனவே சிலபோது ஆண்களின் குரூரத்தன்மையை வெளிக்கொண்டு வருவதில் தாவணி முக்கியப் பங்காற்றுகிறது என்றொரு விதியைச் சமைக்கலாம்.
பதினெட்டு வயதில் நாம் காதலிக்கும் பெண்வீட்டின் சுவர் ஏறிக்குதித்து, வீட்டில் கேட்பாரற்று கிடக்கும் விலையுர்ந்த பொருட்கள் எதையும் திருடாமல், கொடியில் காய்ந்துகொண்டிருக்கும், கேட்டும் தராத காதலியின் தாவணியைத் திருடிக்கொண்டு வருவதுதான் கோஹினூர் வைரத்திருட்டை விட, பெரிய ’பொக்கிஷத் திருட்டு’ என்று நினைக்கிறேன்.
அனேகம்பேர் நாம் விரும்பும் பெண்ணை பாவாடை தாவணியில் சந்தித்திருக்கலாம். முதல் சந்திப்பில் பார்த்த பாவாடையும் தாவணியும், தஞ்சாவூர் பெரியக்கோயில் மேற்கூரையில் பூசப்பட்டிருக்கும் வண்ணம்மாதிரி அதன் வண்ணமும் இன்னும் அகலாமல் அப்படியே நினைவில் இருக்கலாம். ஒருக்கால் அப்படியிருந்தால், இந்தக் கட்டுரையைப் படிக்காமல் அப்படியே நிறுத்திவிட்டு பழைய நினைவுகளோடு கொஞ்சநேரம் பயணித்துவிட்டு, திரும்பி வந்து படியுங்கள்.
தாவணி என்கிற உடை இலை ஆடையோ, தோல் ஆடையோ அணிகிற காலத்தில் வந்திருக்க வாய்ப்பில்லை. நூல் ஆடைக்காலத்தில்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த உடையை கற்பனை செய்யும்முன் பெண்ணைக் கற்பனை செய்திருப்பான். பெண்ணின் எந்தப்பகுதி மறைக்கபட வேண்டும்; எந்தப்பகுதி வெளிப்படவேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டு வரையப்பட்டிக்கும். எந்தப் பெண்ணும் தாவணியை அணியாமல் வாலிப வயதைத் தாண்டி வந்திருக்க முடியாது. ஒளவையாரைத் தவிர.
இந்த உடையை அறிமுகம் பண்ணியவர் என்னால் உயரிய விருதுக்கு தேர்வுசெய்யப்படுகிறார்.
தாவணி எல்லா உடம்புக்கும் எடுப்பாக இருப்பதில்லை. தாவணி உடுத்துவதற்கு மெலிதான தேகம் பிரமாதமானது. பருத்த தேகத்திற்கு பொருத்தம் குறைவாக இருக்கும். பரவலாக அறியப்பட்ட அந்த உடை இப்போதெல்லாம் விழா நாட்களில் மட்டும் பார்க்கமுடிகிறது அதிலும் அபூர்வம்.
கணுக்கால்கள் மறைய, கட்டிய தாவணியை ஒரு பக்கமாக எடுத்து இடுப்பில் சொருக்கிக்கொண்டு கிளிக்கோடு விளையாடும்போது கொட்டிச் சிதறும் அத்தனை அழகும்; வாரி அள்ளமுடியாத வசீகரமும்.
”என் காதலை நீ ஏற்க மறுத்தால்
தயவுசெய்து
உன் தாவணியை
அரைக்கம்பத்தில் பறக்கவிடு”
அ.கென்னடி