செய்தி 12  26-01-2017

சிரமங்களைக் கணக்கிட ஆரம்பித்துவிட்டால் சிரமம்தான்.

ஒரு காரியத்தை விரும்பியவர்களுக்காக அல்லது விரும்பி செய்யும்போது உண்டாகும் சிரமங்கள் சுமையற்றவை. விரும்பாமல் வந்து சேரும் சிரமங்கள் சுமை நிறைந்தவை. அனைத்தையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டால் அத்தனையும் அழகு. அப்படிதான் சிரமங்கள் அழகு பெறுகிறது.

பிரச்னைகளைச் சிரம்மேல் கொள்வதைக்கூட சிரமம் என்று கொள்ளலாம் அல்லது சொல்லலாம்.

யாரிடமாவது கேளுங்கள்…  நீங்கள் வாழ்க்கையில் சிரமங்களைச் சந்தித்து இருக்கிறீர்களா? என்று. சிரிப்பார்கள். அதில், இது ஒரு கேள்வியா?, இதற்கு நான் என்ன பதில் சொல்ல? என்ற இரண்டும் தொனித்தபடி  இருக்கும். சிரமங்களைக் கடந்து வெற்றி பெறும்போது அதில் பொங்கிவழிகிற மகிழ்ச்சி இருக்கும்.

சிலர் இந்தப் பூமியில் வாழ்வதே சிரமம் என்பார்கள்.

ஒருவர், “உங்களுக்கு சிரமத்தைக் கொடுத்திட்டேன்”  என்று சொல்லும்போது அதை சமாளிப்பதே சிரமாக இருக்கும். ஓமத்தின்  அளவேணும் ஒருவரை தன் காரியம் ஆகும் நோக்கில் நிர்பந்தத்திற்கு ஆளாக்கக்கூடாது என்று அவர்  நினைப்பதன் வெளிப்பாடுதான் இந்த ”சிரமத்தைக் கொடுத்திட்டேன்” என்பது. நமக்குப் புரியும். இப்படி ஒருவர் நம்மிடம் சொல்லுகிற மனநிலையில் இருக்கின்றவரெனில் அவருக்கு நாம் விரும்பிதான் எதையும் செய்திருப்போம் என்பது இதன் உள்ளீடு என்று கொள்க.

காதலில் சிரமம், கடமையில் சிரமம், கண்ணியத்தில் சிரமம், இருப்பதில் இறப்பதில்… எதிலில்லை சிரமம்? அவர் அவராக இருப்பது அவ்வளவு எளிதானது இல்லை. எனவே, ஒருவர் சுயத்தோடு இருப்பதில்கூட சிரமம். ஒருவர் சாதாரண விஷயத்தைக்கூட சிரமமாக கருதுவாரெனில் அவர் சோம்பேறி பேர்வழி; ஒருவர் சிரமத்தைக்கூட எளிதாக கொள்வாரானால் அவர் தைரிய பேர்வழி.

இயற்கை இயங்குவதில் சிரமம் பார்ப்பதில்லை. மனித இனத்தைத் தவிர எதுவும் சிரமங்களைச் பட்டியலிட்டுச் சொல்வதுமில்லை; பட்டியலிட்டுக் கொள்வதுமில்லை. இந்தப் பிரபஞ்சத்தில் யாவும் எளிமையாக்கப்பட்டிருந்தால் ஒருவகையில் அலட்சியத் தன்மை நம்மை ஆட்கொண்டிருக்கும். சிரமங்களின் அற்புதம் ஆராயப்படாமல் போயிருக்கலாம்.

சிலவேளை சிரமங்களுக்கு நாம் சிரம் தாழ்த்தி வணக்கம் சொல்லியாக வேண்டும்.

சிரமம் பார்க்காமல் இதை வாசித்த யாவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன்.

 

அ.கென்னடி