உழைச்ச பணத்த பேங்கில போட்டுட்டு கையேந்திக்கிட்டு கடன் கேட்கிறவன்மாதிரி நிக்கிறோம்.எல்லா கருப்பு பணமும் டிசம்பர்குள்ள கலர் கலரா மாறிடும். அந்த வண்ணத்தில வதனமெனும் திகழ்பரத கண்டமும் ஜொலிக்க ஆரம்பிச்சிடும்னு சொன்னாங்க.. மேலோகத்தில போயி நல்லாருக்க நிகழ் வாழ்க்கையில ஆபரணம், முகச்சாயம் பூசிக்கொள்ளாத பெந்தகொஸ்தே அமைப்பினர் மாதிரி, நாளைக்கி நல்லது நடக்கணும்னா இன்னைக்கி சில விஷயங்கள அனுசரிச்சி பொருத்துதான் போகணும் என்று சிலர் வாதிடுறாங்க.
நடப்பு வாழ்க்கையிலதான் எங்களுக்கு நிம்மதி வேணும்.
இப்போதைய தேவை டிஜிட்டல் இந்தியாவா? இல்லை வறுமையில்லாத இந்தியாவா ? இந்தியாவில எத்தனை சதவீதம் பேரு மூனுவேளை சாப்பிடுறாங்க, எத்தனை சதவீதம் பேரு ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறாங்ககிற புள்ளிவிவரம் பாருங்க. இந்தியாவில இருபத்தாறு ரூபாய்க்கு மேல சம்பாதிச்சா அவனுக்கு வறுமையில்லைன்னு ஒரு கோடு கிழிச்சி வச்சிருக்காங்க. சர் சிரில் ராட்கிளிப் வரைஞ்ச எல்லைக்கோட்டைவிட மகத்துவமிக்க கோடுன்னே இதக் கருதுறேன். அந்த வகையில பாத்தா இங்க எல்லாரும் பணக்காரந்தான்; எவனும் ஏழையில்லை.
அரசியல் கடந்து சில விஷயங்களை அணுகியாகணும். இப்போதைக்கி தமிழக மக்களுக்கு அவசரத்தேவை தண்ணியாதான் இருக்கு. அத முறைப்படுத்த முயற்சி பண்ணுங்க. இல்லைன்னா, அவன் அவன் அடிச்சிக்கிட்டு செத்துப்போயிடுவான் போலருக்கு. விவசாயம் பண்றவன் பொழைச்சாதான் டிஜிட்டல் இந்தியா வெளங்கும்.
தண்ணிப் பிரச்னைதான் அரசியலைவிட கொடுமையா இருக்கு.
வளர்ந்த நாடுகள்ல அரசு கேந்திரங்கள், தனியார் பெரு, சிறு நிறுவனங்கள் கடைகள்தோறும் கணினிகள பரவலாக்கியிருக்காங்க; வலைதளங்கள பெருக்கி வச்சிருக்கிறாங்க. அத உணர்ந்த மக்கள் அதற்கு தங்கள பழக்கப்படுக்கிறாங்க. சட்டங்களக் கொண்டு பயமுறுத்தல; கட்டாயப்படுத்தல. வழிகாட்டுதலின் பேரில் மக்கள் இயங்க தயாரா இருக்கிறாங்க. திணிப்பது விரும்பத்தகுந்தது அல்ல. காலங்காலமா கையெழுத்தே போடத் தெரியாத மக்களுக்கு கார்ட தேய்க்க எப்படி கத்து கொடுக்கிறது. இந்தக் கார்ட தேய்கவே பதினாறு கிலோ மீட்டர் பயணம் பண்ண வேண்டியிருக்கு. இதில நடந்த ஒரு அதிசயம் எங்க ஊருல பண்டமாற்று வந்துடுச்சி. இதைப் பரவலாக சின்ன வயசில பாத்திருக்கேன். ஏமாற்று அற்ற ஒளிவு மறைவு இல்லாத வியபாரம்.
பணம் செல்லாது என்ற அறிவிப்பு செல்லக்காசாகிவிட்டது. தோல்விக்கு ஏகப்பட்ட மாறுவேஷங்கள் போடப்படுது. பணமில்லா பரிவர்த்தனை தீவிரவாதங்களுக்கு எதிரா இருந்ததோ, இல்லையோ சிறு வியபாரிகளுக்கு முற்றிலும் எதிரா இருந்தது. இந்தியா வல்லரசாக ஆகிக்கிட்டிருக்குங்கிறதுக்கு இது சரியான உதாரணம்.
அ.கென்னடி