வார்தா புயல். நூற்றி முப்பத்திரண்டு கிலோ மீட்டர் வேகம். பாவம் பறவைகள்.
நாம் ஒரு காலத்தில பார்த்த நிறைய பறவைகளை இப்போது பார்க்கமுடிவதில்லை. கட்டைவிரல் அளவில் தத்தித் தத்திப் போகும் தேன் சிட்டுகள், இரண்டு அடிகளுக்கு வால் நீண்டு வெண்ணிற ரிப்பன் போல் தொங்கும் பறவைகள், பொன் வண்டுகள், மின்மினி பூச்சிகள் இது போன்றவைகளை கிராமங்களில்கூட இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை. ஆனால், எப்போதுமில்லாதபடி காட்டு முயல்கள், மயில்கள் பரவலாக எங்கள் கிராமங்களில் காணமுடிகிறது.
நகரங்களில் ஆங்காங்கே சிலபோது பறவைகள் சத்தம் கேட்கும். வாகன இரைச்சலில் அதுவும் மங்கிவிடும். இப்போது மிகையாக நாங்கள் பார்ப்பது காகங்கள் மாட்டுமே. சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இந்தப் புயலால் சில லட்சம் மரங்கள் விழுந்துவிட்டன. சென்னையில் வானம் வெளிவாங்கியதுபோல இருக்கிறது. வரும் வருடங்களில் வேகவேமாக காற்று மாசுபடும். வெயிலின் தாக்கம் அதிகமாகும். சாலைகளில் கண்களில் படும்படி விழுந்து கிடந்த மரங்களைப் பார்க்கும்போதுதான் இவ்வளவு மரங்கள் இருந்திருக்கின்றனவா என்று நினைக்கத் தோன்றியது.
எல்லாம் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட மரங்கள். வேரோடு வீழ்ந்த மரங்கள் பெரும்பாலும் சாலையோரங்களில் இருந்தவைகள். கழிவுநீர் ஓடுவதற்கும், தொலைபேசி இதர இணைப்புகளுக்கும் மற்றும் நடைமேடையை அழகுபடுத்துகிறோம் என்ற பெயரிலும் தோண்டி தோண்டி மரங்களின் வேர்களை பலமிழக்க வைத்துவிட்டர்கள். அடியோடு வீழ்ந்த மற்றும் கிளைகள் பிய்த்துக்கொண்டும் முறிந்தும் சாய்ந்த மரங்கள் உயிரோடு இருக்கும்போது தந்த பலன் தவிர்த்து இறந்தபிறகு எந்தப் பயனும் அற்று கிடந்தது. அவை அழகுக்காக வைக்கப்படவைகள். அழகு நிரந்தரமானது அல்ல என்று இயற்கையால் இயற்கையாகவே நிறுபிக்கப்பபட்டிருக்கிறது. ஆல், மா, பூவரசு, வேம்பு இப்படியான மரங்களின் சேத எண்ணிக்கை குறைவு.
நிறைய மரங்களின் பெயர்களே எனக்கு உட்பட பலருக்குத் தெரியவில்லை. சாலையோர மரங்களில் எத்தனை ஆணிகள், விளம்பர தட்டிகள் எத்தனையெத்தனை வயர் சுற்றல்கள், வாகனப் புகைகள், நீர் தேடிக்கூட வேர் மண்ணுக்குள் நீண்ட தூரம் போகமுடியவில்லை. மரம் என்பதால் மட்டுமே நம்மை மன்னித்திருக்கிறது.
புயல் முடிந்த மறுநாள் நானும் என் நண்பரும் இருசக்கர வாகனத்தில் அண்ணா பல்கலைக் கழக சாலையில் போய்க்கொண்டிருக்கிறோம். காடுகள் கவிழ்ந்து போய்க்கிடக்கிறது. காந்திமண்டபம் அருகில் புயலின் வேகத்தை எதிர்கொள்ள முடியாமல் அல்லது தாக்கு பிடிக்கமுடியாமல் இரண்டு பறவைகள் செத்துகிடக்கிறது பக்கத்தில் கூட்டோடு சில குஞ்சுகள். மரங்களைப் பார்த்து கவலைப்பட்ட என் துக்கம் பறவைகள் மேல பற்றிக்கொண்டது. இயற்கை மாற்றங்களை பறவைகள் விலங்குகள் அறியும். இருந்தும் தன் குஞ்சுகளை விட்டு தாங்கள் மட்டும் பறந்து போக நினைக்காததன் விளைவாகத்தான் இருந்திருக்க முடியும் அந்த மரணத்தின் காரணம். இப்படி எத்தனை எத்தனை பறவைகள். என்னவாக ஆகியிருக்கும்.
துண்டிக்கப்பட்டிருந்த மின்சாரம், தொலைக்காட்சி, தரைவழி தொலைபேசி, வான்வழி அலைபேசி மற்றும், தரைவழி வலைதள இணைப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்திவிட்டன. இன்னும் பறவைகளின் ஒலிகளை மட்டும் என்னால் கேட்க முடியவில்லை.
நாம் சுமார் ஐம்பது வருடங்கள் பின்னோக்கிச் சென்றுவிட்டோம். ஆக, இயற்கையிடம் வாழ்வியல் தத்துவங்களைக் கற்றுக்கொள்ள விரும்புவோர் கற்றுக்கொள்ளலாம். கட்டணம் எதுவுமில்லை.
அ.கென்னடி