நாசமா போச்சி... (பாடல்)  13-01-2017

பல்லவி

அங்க இங்க கடனைவாங்கி
வயலுல போட்டோம்
ஆக மொத்தம் தண்ணியில்லை
கருகுது தோட்டம்
 
நஞ்ச புஞ்ச சாகுபடி
நாசமா போச்சி
நாளும் நடக்கும் தற்கொலைகள்
நமக்கெல்லம் சாட்சி
 
சாகுபடி செய்றவங்க
சாகும்படி ஆகுது - நான்
அடிச்சிக்கிட்டு அழுகிறேன்
அடிவயிறு நோகுது                               (அங்க இங்க…)
 
சரணம் 1
 
விவசாயம்தான் முதுகெலும்பு
இந்திய நாட்டில்
வெவரமெல்லாம் படிச்சிருக்கோம்
எழுதுன ஏட்டில்
 
தண்ணிக்கான போராட்டத்தில
ஒருத்தன் குதிக்கல
தனக்கு வந்த பிரச்னைன்னு
இரத்தம் கொதிக்கல
 
சிபியூ மாணிட்டரில்
அரிசி வெளையுமா
பஞ்சம்பசி வந்தாஆடி
பென்ஸும் களையுமா
 
விவசாயின்னு சொல்லிபாத்தா
மரியாதை இல்லை - இப்போ
வெவரமா நீ எண்ணிப்பாரு
சொல்லிய சொல்லை                              (அங்க இங்க…)
 
சரணம் 2
 
ஆத்திலேயும் தண்ணி இல்லை
வறண்டு கெடக்குது
அடிச்சிதூறி மழையும் வல்லை
மொரண்டு புடிக்குது
 
போருபோட்டுப் பாத்தா வெறும்
காத்துதான் வருது
போரடிச்சி வாழ்ந்த நமக்கு
வறச்சிதான் விருது
 
காவிரி நீர் போராட்டத்தில
ஒன்னு கூடல
ஐநூறாயிரம் செல்லா துன்னார்
கைகால் ஓடல
 
ஓடிவந்து சர்வகட்சி
ஒன்னு கூடுறான் - கூடி
அதுக்கெதிரா தீர்மானத்தை
அங்கே போடுறான்                                 (அங்க இங்க…)
 
சரணம் 3
 
தனக்கு மட்டும் வெளையவச்சா
வயலில் கொஞ்சமா
தலைவிரிச்சி ஆடும் தேசம்
பசியும் பஞ்சமா
 
உழுதவங்க கணக்கு பாத்தா
உலக்கு மிஞ்சுமா
எழுந்து நின்னு கோவப்பட்டா
எதுவும் எஞ்சுமா
 
காவிரிநீர் பேச்சுவார்த்தை
அதிலும் அரசியல்
அனாதைதான் காவிரிதாய்
காணும் இனிஷியல்
 
வேர்வைச் சிந்தி ஒழைக்கிறவங்க
நிலைமை தெரியுமா - அவன்
வேலைநிறுத்தம் செஞ்சா நம்ம
அடுப்பு எரியுமா                                    (அங்க இங்க…)
 
சரணம் 4
 
வெவசாயத்தை ஒன்னு சேந்து
பாது காக்கணும்
வெவசாயிய உச்சாணியில்
கொண்டு சேக்கணும்
 
அவனையன்றி இங்கே ஒரு
அணுவும் அசையாது
அவனை வதைக்க நெனச்சிப்பாரு
இயற்கை இசையாது                               (அங்க இங்க…)
 
 
அ.கென்னடி