”எல்லாரும் சுபிச்சமாகப் போறாங்க”. “இந்தியா வல்லரசு ஆகப் போவுது” ”பதுக்கல் பணம், கருப்பு பணம் எல்லாம் ஒழிச்சாச்சு”, ”இந்திய மக்கள் பொருளாதார தன்னிறைவு அடையப்போறங்க”. ”இது துணிச்சலான முடிவு”, ”துல்லியமான தாக்குதல்” , ”டாலர் மதிப்பு குறையப்போவுது”, ”பெட்ரோல் விலை இறங்கப்போவுது” ஆதார் கார்டு, பேங்க அக்கவுண்ட், டிஜிட்டல் இந்தியா
மயிரு !
ரோட்டுக்கு வந்தவனும், பேங்க், போஸ்ட் ஆபிஸ் வாசல்ல நின்னவனும் இந்த ஐநூறை மாத்திட்டா நாளைக்கி பொழுத ஓட்டிடலாம்னு நெனைச்சவன். சிறுக சிறுக சேத்தவன்; புள்ள படிப்புக்கு, கல்யாணத்துக்குன்னு காசு சேத்து வச்சவன்… இன்னும் பாவப்பட்டவன்.
ஒரு இடத்திலேகூட உடம்புல வெயில்ல படாதவனோ, அவன் வேர்வைய அவன் பாக்காதவனோ பணத்த மாத்த வரிசையில நின்னதா பாக்கவும் இல்லை கேக்கவும் இல்லை. பணம் செல்லாதுன்னு அறிவிச்சதுனால ஒருநாளு பட்டினியா கெடந்ததுதான் மிச்சம்.
வரவே வாரா கடன், வசூலிக்கா கடன்... ஆனா, நாம அண்ணிய நாட்டுக்கிட்ட கடன்.
வெளிநாட்டு வங்கிகள்ல பதுக்கி வச்சிருக்கவன் லிஸ்ட் சர்க்காருகிட்ட இருக்கு, கடன் வாங்கிட்டு குடுக்காதவன் லிஸ்ட் சர்க்காருகிட்ட இருக்கு, எந்தெந்த மாநிலத்தில எவன் எவன் பணம் நெறையா வச்சிருக்கான் வருமானத்துக்கு மீறி சொத்து சேத்து வச்சிருக்கான்ங்கிற லிஸ்ட் சர்க்காருக்கிட்ட இருக்கு. இது இல்லாம அரசாங்கத்துக்கு வரி கட்டாம ஏய்ச்சிபுட்டு பெரிய மனுசனா திரியறவன் லிஸ்ட்கூட சர்க்காருகிட்ட இருக்கு. இதயெல்லாம் ஒழுங்கு படுத்தியாச்சு. அதுனால இப்போ அடித்தளத்திலேர்ந்து இந்திய சமூகத்த ஒழுங்கு படுத்த கெளம்பிட்டோம்.
முதலாளிக்கு கொடுத்த கடன் முக்கால்வாசி தள்ளுபடி. காரணம் கஷ்டம், பாவம். விவசாயி செத்திக்கிட்டு இருக்கிறான் விமோச்சனம் தெரியல. நம்ம கல்ச்சர் அக்ரி கல்ச்சர் அதெல்லாம் சரி. நெருக்கி புடிச்சி கேட்டா அவன் ’முற்பிறவியில செய்த வினை’ அப்படிதான் ஆன்மீக இந்தியா சொல்லுது.
மல்லையா இருக்கிற இடம் தெரியல; மதன் இருக்கிற இடம் தெரியல. ஆனா இந்த தேசத்தில ஒரு சாதாரண மனுசன் கரண்ட கடிச்சி செத்துப்போறான்.
வாழ்றதுக்கு, பேசுறதுக்கு, எழுதுறதுக்கு பயமா இருக்கு. அச்சுறுத்தல் என் இருத்தல கேலி பண்ணுது.
வெளக்கமாற போட்டு இந்தியாவ கூட்டியும் பாத்தாச்சு. சுத்தமாகல மாட்டுக்கறி அரசியல், மறுபடியும் குலக்கல்வி, பொது சிவில் சட்டம், முன்னறிவிப்பில்லா பணம் மாற்றம்… என் உணவில தலையிடுவே, என் உணர்வில தலையிடுவே, என் உடமையில தலையிடுவே… சகிச்சிக்கிட்டு போயிகிட்டே இருக்கணும்.
ஏன்னா… இந்தியன் என்பதில் எனக்கு பொருமை !
அ.கென்னடி