Magazine Name | Score |
Online Film News | 3 |
சாதியை பிரதானப்படுத்தி பிரமாதப் படுத்திய படம்.
அவர் அவருடைய அனைத்து படங்களிலும் எப்படி இருப்பாரோ அப்படிதான் இதிலும். மாற்றமில்லை. நம் எதிர்பார்ப்பும் வீணாகவில்லை.. அவர் அடிப்பதுமாதிரி மெஸி புட்பாலைக் கூட அடித்ததில்லை. விஷாலின் வழக்கமான படங்களில் இதுவும் ஒன்று. இவர் படங்களென்றால் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் திரையரங்களுக்கு போவதுதான் வழக்கம். அதை நிறைவு செய்திருக்கிறார்.
ஐஏஎஸ் படித்தும் அவனுக்கு ஒரு தரப்பு ஆதிக்க சாதியினரிடத்தில் பாதுகாப்பு இல்லை. இதுதான் மைய கரு. பிரச்னைகளும் அவர்களாக இருக்கிறார்கள் அதற்கு தீர்வாகவும் அவர்கள் இருக்கிறார். இடையில் அடிநிலை ஜாதியை சார்ந்தவர்கள் இதில் ஊறுகாய்.
படமெங்கும் ஜாதிய வன்மம் தாமிரபரணி வெள்ளமாக கரையடங்கி ஓடுகிறது. விஷால் ஒரு அசகாய சூரன். அவர் தீர்க்கமுடியாத பிரச்னைகளையெல்லாம் தீர்த்து வைப்பார். இதுபோன்ற படங்களைப் பார்க்கும்போது சோர்வாக இருப்பதோடன்றி கடுப்பாகிறது.
ஐஏஎஸ் படித்த ஒருவன் மனநோயாளிமாதிரி, மஞ்சள் தண்ணீர் தெளித்த ஆடுமாதிரி தெரிகிறான் அல்லது திரிகிறான். தன் சுயம் இழந்து மனிதன் என்கிற பிரக்ஞை அற்று இருப்பவனாக படம் நெடுகிலும் சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. ”…ஓர் நொடிக்குள் ஓடப்பர் உதயப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆகிடுவார் இதை உணரப்பா நீ” என்று பாரதிதாசன் யாருக்கு எழுதுனார் என்று தெரியவில்லை.
வரலெட்சுமி படத்தின் இறுதியில் அழுது, அவள் கண்ணீர் தரையில் விழும்போது மழை பெய்கிறது. இதை எதில் வகைப்படுத்துவது என்று குழப்பமாக இருக்கிறது.
நாயகியின் நடிப்பு அவ்வப்போது நம்மை சோர்வடையாமல் பார்த்துக்கொள்கிறது.
இயக்குனர் லிங்குசாமியிடம் இன்னும் மேலான விஷயங்களை எதிர்பார்த்தோம்.
அஞ்சல் ஓட்டம் மாதிரி சமீபத்தில் தமிழ்சினிமாவை நல்ல இடத்தில் ஓடி கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள். அதை மீண்டும் பழமைக்குள் இழுத்துச் செல்லாதீர்கள்.
நன்றி
ஆசிரியர்,
ஆன்லைன் பிலிம்நியூஸ்.