Magazine Name | Score |
Online Film News | 41/2 |
எனக்கு விமர்சனம் எழுதுவதில் துளியும் விருப்பம் கிடையாது... ஆனால் இந்த படம் என்னை ஏதோ செய்கிறது... இந்த படத்தைப் பற்றி நான் யாரிடமாவது எதையாவது பகிர்ந்து கொள்ள துடிக்கிறேன்.... இது விமர்சனம் அல்ல இந்த திரைப்படம் எனக்குள் உருவாக்கிய மனநிலை அதை உங்களுக்கு சொல்கிறேன்....
நீங்க உங்க காதலியை தொலைச்சிருக்கிங்களா....??? ஆமாம் எனில் என்னை போல் நீங்களும் இந்த படம் முடிந்தபின் அழுவதற்கு தோள் தேடி அனாதையாக நிற்க நேரிடும்....
நீங்க உங்க காதலியைத் தேடி வீதிகளிலும் தெருக்களிலும் அலைந்து திரிந்திருக்கின்றிர்களா...?? முகப்புத்தக தேடல் அட்டவணையில் இன்றும் உங்கள் முதல் காதலியை தேடிகிட்டு இருக்கீங்களா....?? ஆமாம் எனில் இந்த '96 திரைப்படம் உங்களை உங்கள் காதலின் வலியை இன்னும் பல மடங்கு உங்களுக்கு வாரி வழங்கிவிடும்....
நீங்க என்னைக்காவது உங்க காதலில் அன்று இப்படி நடந்திருந்தால் என் வாழ்க்கையே சந்தோசமாக மாறி இருக்கும் என்று நினைத்து நினைத்து ஏங்கியிருக்கின்றிர்களா...?...
அப்போ இந்த திரைப்படம் உங்களை உங்கள் காதலின் வலியை அழகை உங்கள் வாழ்க்கையை ஒரு நிமிடம் கால பயணத்திற்குள் ஏற்றி சென்று மீண்டும் உங்களை நிகழ் காலத்தில் தவிக்கவிட்டு சென்று விடும்....
ஆனால் நிச்சயம் ஒன்று இது உங்களுக்குள் இருக்கும் உங்கள் காதல் எத்தனை மேன்மையானது என்பதை உங்களுக்கு உணரச் செய்யும்....
ஆந்த்ரே தார்கோவெஸ்கி- யிடம் ஒரு பத்திரிக்கையாளர் நல்ல சினிமாவென்றால் என்ன என்று கேள்வி கேட்டார்.... அதற்கு ஆந்த்ரே சொன்னார்.... ஒரு திரைப்படம் என்பது இயக்குனர் தான் நினைக்கும் கருத்துக்களை எல்லாம் அதனுள் திணித்து அதை ரசிகனுக்கு கொடுப்பதல்ல.... அப்படி செய்தால் அது திரைப்படம் காண வரும் ரசிகனுக்கு இயக்குனர் செய்யும் துரோகம் ஆகும் என்கிறார்.... ஒரு நல்ல சினிமா என்பது எந்த சமரசமும் இன்றி ஒரு வாழ்க்கையை அல்லது வாழ்க்கையின் ஒரு பகுதியை யதார்த்தத்தின் அழகியலோடு படம் பிடித்து காட்டுவது ஆகும் என்கிறார்.... அதில் பார்வையாளன் எங்காவது தன்னை அதனுள் பொருத்திப் பார்த்துக் கொண்டு உணர்வுகளை வெளிப்படுத்தினான் என்றால் அதுவே நல்ல சினிமா நல்ல படைப்பு ஆகும் என்கிறார்......
வோங் கர் வாய்-யின் in the mood for love திரைப்படத்தோடு ஒப்பிட்டு பார்க்கக் கூடிய ஒரு காதல் படம் தமிழில் உண்டெனில் அது '96 திரைப்படம் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.... படத்தின் இசை ஒளிப்பதிவு படத்தொகுப்பு மூன்றும் ரிதமாக உங்களுக்குள் பயணிக்கும் '96-ல்... ராமாக நீங்களும் ஜானுவாக உங்கள் காதலியும் வாழ்ந்து காட்டுகிறார்கள்.... ஒருமுறை அந்த அதிசயத்தை திரையில் சென்று பாருங்கள்....
திரையரங்கை விட்டு வெளிவர மனம் மறுக்கும்.... ஆனால் வேறு வழியில்லை என்னைப்போலவே நீங்களும் வெளியே வந்து புலம்பி தள்ளுங்கள்.... எழுதி கிறுக்குங்கள்.... இல்லை தொலைத்த உங்கள் காதலியை காதலனை தேடுங்கள் முகப்புத்தகத்திலோ அல்லது உங்கள் ஊரிலோ.....
ஒரு வசனம் சொல்கிறேன்....
ராம் : உன்னை எங்க விட்டேனோ அங்கேயே தான் இன்னும் நிக்குற....
படம் பார்த்தபின் இந்த வசனத்தின் வலிகளை நீங்கள் சுமப்பீர்கள்....
- சதீஷ் குமார் ராஜா