இருண்மையாக சில உண்மைகள் !  13-12-2017

வாழ்க்கைமீது நிறைய கசையடிகள். காயம் ஆறிய பின்னும் கண்களில் படும் தழும்புகள். தனிமனித வாழ்க்கை ஏகமாய் ஏளனம் செய்யப்படுகிறது.

நிம்மதி என்பது நாம் தேடிக்கொள்வதாக இருந்தாலும் நிம்மதியாக இல்லை. ஏதேதோ நினைவுகள் வந்து என்னை ஏகடியம் செய்கிறது. இதிலிருந்து மீள்வதற்கு, ’தீவிரவாதிகளைப் பிடிப்பதற்கு பணம் செல்லாது’ என்று அறிவித்தது மாதிரி நூதனமாகவும் வித்தியாசமாகவும் எனக்கு எதுவும் யோசிக்க தெரியவில்லை. பிரச்னைகள் பிடரியை பிடித்து ஆட்டும்போது, இனிவரும் தலைமுறை இந்தச் சமூகத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறது ? சவால்களை எப்படி சமாளிக்கப்போகிறது? என்கிற கேள்வியை என் வீட்டிலிருந்தே துவக்கவேண்டியிருக்கிறது.

அனைத்து இயற்கை வளங்களும் மறைவின்றி களவாடப்பட்டாகிவிட்டது. அதன் வெளிப்படை தன்மைக்கு மக்களின் சகிப்புத்தன்மையும் சலிப்பும் வலு சேர்க்கிறது. சட்டம் வடிவமைத்திருக்கும் சுற்றுச்சுவர்கள் அவர்களுக்கு பெரும் பாதுகாப்பளிக்கிறது.

அரண்கள் மனையை ஆட்சி செய்யும் முரண்கள்.

வருங்காலத்தவர்களுக்கென்று என்ன இருக்கப்போகிறது?. இயற்கை என்பதெல்லாம் எளிதாக உருவாக்கிக்கொள்ளகூடியதும் இல்லை.

தன் வாழ்நாள் முழுவதையும் தண்ணீர் சம்பாதிக்க மட்டுமே செலவழித்துவிட்டு இறந்துபோக நிறைய வாய்ப்புகள் வந்தாலும் வரும். தண்ணீருக்காக சகலங்களையும் விட்டுக்கொடுக்க ஒரு சமூகம் தயாராகலாம்; தகராறு நடக்கலாம். ஐக்கிய நாடுகளின் சபைகளில் இதுவே பிரதான விவாதப்பொருளாக இருக்கலாம். இதன் ஆக்கப்பூர்வ அவசியம் குறித்து சட்டமன்றத்தில் பேசும் எதிர்கட்சியாளர்களின் உரைகள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படலாம்.

முற்றிலும் சேதமடைந்துள்ளது தேசம்.

அப்போதெல்லாம் சாலை ஓரத்தில் நடப்பட்டிருக்கும் மரங்களுக்குதான் எண்கள் இடப்பட்டிருக்கும். இப்போது மனிதர்களுக்கும் இடப்பட்டாகிவிட்டது. இனி, அரசு மற்றும் அலுவல் சார்ந்த எந்த விஷயத்திலும் எனக்கு பெயர் தேவையில்லை. அறிமுகம் இல்லாதவர் என் பெயரைக் கேட்கும்போது, ஜாதியை, மதத்தை, கல்வித் தகுதியை வெளிச்சமாக்கும் பெயரை சொல்வதைவிட, ஆதார் எண்ணை சொல்வது பாதுகாப்பானது. என் பெயரைவிட அது என்குறித்த போதிய தகவல்களை தன்னகத்தே உள்ளடக்கி வைத்திருக்கிறது. எண்ணப்படுவதுதானே வாழ்நாள். பெயரைச் சொல்வதில்கூட பொய் இருக்கலாம்; இரண்டு பெயர் இருக்கலாம். ஆனால், எண்ணில் அது நிகழ வாய்ப்பில்லை.

என்ன சொல்லி ஒரு கீழ்நிலையில் இருப்பவன் இருமாப்படைந்து கொள்வது.  குறி வைத்து தாக்குதலுக்குள்ளாகிறது ஒரு இனம். சொரணையற்ற மனிதர்கள் தயார் பண்ணப்படுகிறார்கள். ஒரு யோக்கியமான சமூகம் எதையெல்லாம் புறந்தள்ளவேண்டுமோ அவை அனைத்தும் இங்கே அங்கிகரிக்கப்படுகிறது. அங்கிகாரங்கள் சிம்மாசனங்கள் கேட்கிறது. அகங்காரங்கள் அரியணைகள் விரும்புகிறது? ஆணவங்கள் அரசாட்சி செய்கிறது?

கட்சியை காப்பாற்றிக்கொள்ள கடுமையான போராட்டங்கள். அவர்கள் நம்மைக் காப்பாற்றுவார்கள் என்று நாம் நம்புகிறோம். நம் நம்பிக்கையில் மட்டுமே நகர்கிறது நம் நாட்கள். கொடிகள் இருக்கும் அளவிற்கு இன்று கொள்கைகள் இல்லை

சமூக வலைதளங்கள்… வாழ்க்கையை முழுவதுமாக எங்கோ இழுத்துச் செல்ல பார்க்கிறது. எது சரி? எது தப்பு? என்று நாம் புரிந்து கொள்ளவே அதிகபட்ச அறிவு தேவையாக இருக்கிறது. கைகளில் உலகம் வந்துவிட்டாலும் அந்த உலகங்கள் பல பிம்பங்களைக் கொண்டிருக்கிறது.

மத்தியிலிருந்து விட்டுக்கொண்டுக்கும் மனப்பான்மையை வளர்க்க போராடுகிறார்கள். மாநிலத்தில் இலவசங்கள் பெறுவதை ஊக்குவிக்கிறார்கள். மொத்தத்தில் நான் யோகா கற்றுக்கொண்டிருக்கிறேன். அப்படியாவது ஏதேனும் யோகம் வருகிறதா என்று பார்க்கலாம் என்று குருட்டுத்தனமாக நம்புகிறேன். இதை, பதினைந்து லட்சரூபாய் என் வங்கி கணக்குக்கு வரும் என்று நம்பி வங்கியில் அவசரமாக அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிய என் முந்தைய குருட்டுதனத்துக்கு இணையாக்கலாம்.

கல்வியிலும் மருத்துவத்திலும் அளப்பரிய மாற்றம் வந்துவிடாதா என்று ஆருடம் பார்த்துக்கொண்டு இருப்பவர்களும் இருக்கிறார்கள். இருக்கட்டும். ஏன் மாற்றம் வேண்டும்? தகுதி உள்ளவர்கள் தப்பிப் பிழைக்கட்டும். டோல்கேட்டில் வேதனையோடு சுங்கவரி கட்டுபவர்கள், அந்த புள்ளியிலிருந்து, ’இந்த நாடு சரியான பாதையில் பயணிக்கவில்லை’ என்ற தீர்க்க தரிசனங்களோடு விவாதத்தை ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்ட்த்தில் தன்னைத்தானே சமாதானம் செய்து கொள்கிறார்கள். அது தொடர்பான ஒரு வெகுசன போராட்டம் நிகழ்கிறபோது அந்த வழியில் பயணிப்பதை தவிர்ப்பதைக்கூட சாதனையாக கருதுகிறார்கள்; வெற்றியாக நீட்டி முழக்குகிறார்கள். கேட்பவர்களுக்கு இன்னும் சுவாரஸ்யம் தேவைப்பட்டால் அதை கொச்சைப் படுத்தவும் தயங்குவதில்லை.

பல நாடுகள், பலகோடிகள், பகலிரவு பயணங்கள் யாவும் ”எதிர்கால திட்டமிடல்கள்” , ”வருங்காலத்திற்கான வரைவுகள்” என்று விடாப்பிடியாக நம்புவதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கான அதிகபட்ச அறிவைக்கொண்டு அதை நிருபணம் செய்யவும் முயலுகிறார்கள். ஆதாரங்கள், சான்றுகளோடு மறுத்தலித்தாலன்றி அவர்கள் மிக ஆழமான அரசியல் புலமை இருப்பதாக கர்வம் அடைந்துகொள்கிறார்கள். ஒரு தனிநபர் தொடர்ச்சியாக வங்கியைச் சுற்றிச் சுற்றியும், பணத்தை சுற்றிச் சுற்றியும் வந்துகொண்டிருந்தால் அவன் திருடன். ஒரு அரசாங்கம் சுற்றிக்கொண்டு வந்தால் நாட்டின் வளர்ச்சி.

என் வாழ்க்கை துளியும் இலகுவாக்கப்படவில்லை. மாறாக, பதட்டம் அதிகரித்துள்ளது. அன்றாடக் கூலியான என்முன் ஆயிரம் கைகள், கால்களோடு ஆக்டோபஸ் வந்து பயமுறுத்துவதைப்போல கனவு வருகிறது. உண்மையாகிவிடுமோ என்ற அச்சம் ஆட்கொள்கிறது. படுக்கை தயாராக இருக்கிறது, தூக்கம் வரவில்லை. விடிந்தால் புதிய அறிவிப்புகள் ஏதாவது வந்துவிடுமோ என்ற வேதனை ஏதோ ஒரு சோகத்துக்குள் என்னை ஆழ்த்துகிறது.

அக்கிரமங்களுக்கும் அநியாயங்களுக்கும் நீதிகள் கற்பிக்கப்பட்டு அது விளக்கவும் படுகிறது. அதற்கு வலைதளங்கள் மிகுந்த ஒத்துழைப்பு தருகிறது. கோசம் போடுவது வீரமரபாக பார்க்கப்படுகிறது அது தமிழச்சிக்கான அடையாளமாகப்படுகிறது.

தொன்மைகள் கேலிக்குள்ளாகிறது. தோண்டியவை மீண்டும் மண்ணால் மூடப்படுகிறது.  அதேவேளை கோட்சேக்கள் வரலாற்று நாயகர்களாக சித்தரிக்கப்பட்டு அவர்களுக்கு சிலை வைக்கப்படுகிறது. பிஞ்சு உள்ளங்களில் தீ விதைக்கும் முயற்சிகள் முடிந்தமட்டும் ஒருபக்கம் மேற்கொள்ளப்படுகிறது. ஜாதிகள் புத்துயிர் பெறுகிறது. அது தொடர்பான கலவரங்கள் ஆதரிக்கப்படுகிறது. கலந்த சமூகமாக கிடந்தவர்கள் தனித்து சங்கமாக்கப்பட்டு இப்போது ஜாதியாக்கப்பட்டு  இருக்கிறார்கள்.

மாடுகளுக்கு கவலைப்பட்ட சமூகம் மண்ணுக்கான கவலைகளைக் குறைத்துக்கொண்டுள்ளது. பின்னடைவை சந்தித்திருக்கிறது ஒரு போராட்டம். எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருப்பதும் ஒரு சமூக சேவைதான் என்று வாதிடுபவர்களை நான் பார்த்திருக்கிறேன். காவிரிநீர் போராட்டங்கள் பார்த்து எந்த சலசலப்புகளும் இல்லாத நபர்களையும் நான் பார்த்திருக்கிறேன். இரண்டு நாட்கள் சென்னையில் கேன் வாட்டர் போடுபவர்கள் போராட்டம் என்ற பெயரில் நிறுத்திவிட்டால் ஒருக்கால் தண்ணீரின் அவசியம் தெரியவரலாம்; அதன் முக்கியத்துவம் புரியவரலாம்.

காய்கறிகள் உண்பவர்கள் தன்னை மேன்மையானவர்கள் என்று நினைக்கும் மனோபாவம் வளர்த்தெடுக்கப்படுவதோடு மாமீசம் தின்பவர்களை தாழ்த்திப் பார்ப்பது; அவனை துன்புறுத்துவது; அதன் மூலம் அவன் ஆதியை ஆராய முற்படுவது என்பதெல்லாம் சாதாரணத்திற்குள் வந்துவிட்டது. மரம், செடி, கொடிகளை வெட்டும்போது வடியும் பால், விலங்குகளை வெட்டும்போது வடியும் ரத்ததிற்கு ஒப்பாக பார்க்கப்படுவதில்லை. ”ஆ.. அம்மா..”  என்று கத்தினால் மட்டுமே உயிர் என்ற தகவல் மரபணுக்குள் பதியம் போட்டு வைக்கப்பட்டிருக்கிறது

ஒரு வாழிடம் குறிப்பிட்ட சாரர்களுக்கு மட்டுமே உரித்தானது என்றும் நிலை நிறுத்த எத்தன்மையான ஆயுதங்களையும் பிரயோகப்படுத்தலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதை முன்மொழிந்தவர்களே வழிமொழியும் அபத்தமும் ஆபத்தும் இங்கே இருக்கிறது.

எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அறிவார்ந்த கவனம் தேவையாக இருக்கிறது.

ஒரு கருத்தை தனிமனிதனாகவோ ஒரு குழுவாக பேசுவதில் முன்பிருந்த சுதந்திரமும் இப்போது பறிக்கப்பட்டுள்ளது அல்லது அவர்களுக்கு தண்டனைகள் தரப்பட்டுள்ளது. சத்தமாக ஒரு கருத்தை சொல்வது சத்தமில்லாமல் ஒரு கருத்தை சொல்வது இரண்டுமே இங்கே மன்னிக்கமுடியாத குற்ற பிரிவில்தான் வருகிறது. ஐநாவால் விவாதிக்கப்படும் ஒரு கருத்து அவன் சார்ந்த அரசால் விவாதிக்கமுடியாமல் போகிறது. தனிமனிதனாக இந்தச் சமுதாய இருட்டுக்கு விளக்கேற்றுவது பெரியாரோடு முடிந்துபோனது. இது யாருக்கு புரியுதோ, புரியலையோ சுமத்ரா உனக்குமா புரியல?

தகவல் தெரிவது அறிவாகாது.

ஒரு வீட்டுக்குள், சமூக தின நிகழ்வுகளாகிய தக்காளி விலையேற்றம், ஜி.எஸ் டி, கல்வி கட்டண உயர்வு, கதிராமங்கலம் நெடுவாசல் பிரச்னை, நீட் இப்படி எது குறித்தும் தெரிந்துகொள்ள விரும்பாமல், முயலாமல் இருப்பவர்களின் அன்றாடங்கள் குறித்த அங்கலாய்ப்புகள்மீது நமக்கு அளப்பரிய ஆர்வம். அப்படியானதொரு வாழ்க்கையை எல்லோரும் விரும்பும் மனோபாவத்தின் வெளிப்பாடாகக்கூட அது இருக்கலாம்.

பிரச்னைகளிலிருந்து தன்னை முழுவதுமாக விடுவித்துக் கொள்வதே நிம்மதி. அதுவே பூரணம்.

மழை பெய்கிறது சென்னையில் வழக்கம்போல் மழைநீர் ஓடி கால்வாய்களில் கலக்கிறது மற்றும் சாலைகளில் தேங்கிக்கிடக்கிறது. என் கிராமத்தில் அடித்த மழையில் பூமி குளிர்ந்துவிட்டதாக தகவல். மேட்டூர் அணை நீர்மட்டம் ஏற துவங்கியுள்ளது. சந்தோஷமாக இருக்கிறது.

சில நாட்களாகவே தக்காளி சேர்க்காமல் சமைக்கும் திறமை வீட்டில் கைக்கூடி இருக்கிறது. தக்காளி சாதத்திற்குக்கூட தக்காளி சேர்க்கவேண்டிய அவசியமில்லை என்ற அளவுக்கு தேர்ச்சி பெற்றுவிட்டார்கள். டிஜிட்டல் இந்தியாவில் இது ஒரு சாமானியனின் சாதனை என்று கொள்ளலாம். அரிசியில்லாமல் சோறாக்கும் அற்புத கலையையும் கற்றுக்கொள்ளும்படி வேண்டியிருக்கிறேன். ரேசனை நம்பி இனி மோசம்போக வேண்டிய அவசியம் இருக்காது.

ஒரு நிமிஷம்…

… குறைஞ்சி போச்சி

என்ன? ”பிக் பாஸ்” நிகழ்ச்சியோட ரேட்டிங் குறைஞ்சி போச்சா?

ஓவியா? …

சொல்லுங்க… ஓவியாவுக்கு என்ன?

அவங்க வெளிய வந்த பின்னாடி…

பின்னாடி…?

 

. கென்னடி