நினைவில் நிற்கும் மரங்கள் !  03-02-2017

எனக்கு அஃறிணைகளில் அதிகம் பிடித்தது மரங்கள்தான். 

இப்போது  இரவு படுக்கிறேன். அதிகாலை என்னை  துயில் எழுப்புவது பறவைக் கூட்டங்களாகத்தான் இருக்கிறது. பறவைகள் சத்தம் இனிமையாகத்தான் இருக்கிறது. என் மற்றும் அக்கம் பக்கத்து வீட்டிலிருப்பவர்கள் அதைத் தொந்தரவாக நினைக்கிறார்கள்.  நகர்புறத்திலிருந்து செல்லுகிற  நமக்கு கிராமத்துப் பறவைகளின் கலவையான ஒலிகள், கண்களில் படும் கூடுகள் ரசிக்கவைக்கிறது. கோழி இறகெடுத்து காது குடைவது மாதிரியான சுகம். அதற்கு மரங்கள் துணைபுரிகிறது.  

சிறிய வயதில் யாருக்கும் பாதகமில்லாமல் திருடுவது  ஒரு த்ரில்தான்.  வயதில்  உள்ள சிறுசுகள் ஒன்றிணைந்து திட்டம்  போடுவோம். நிறைவேற்றுவோம். தேங்காய்  திருடுவது,  மாங்காய் திருடுவது,  நாவற்பழம் திருடுவது,  கொய்யா, பப்பாளி பழங்கள் திருடுவது. மரவள்ளிக் கிழங்கு திருடுவது. இதுமாதிரி  திருடுவது எல்லாமே தின்பதற்காகத்தான் இருக்கும். இவைகள் தண்டனை இல்லாத குற்றங்கள். மன்னிக்கும்படியானது. இருந்தாலும் தெரிந்துவிட்டால் பிராது கொண்டுவருவார்கள். பஞ்சாயத்து, தீர்ப்பு, கண்டிப்பு, மறுநாளோ மறு வாரமோ மறுபடியும் விட்ட இடத்திலிருந்து தொடங்கிவிடுவோம்.

இதுவெல்லாம் பின்னாளில் வாழக்கையில் தவறான பாதையில் பயணிக்க முன்னுதாரணமாக யாருக்கும் அமைந்ததில்லை.

சாயங்காலம்  பொழுது குந்துவதற்குள் எல்லோரும் கூடி முடிவு செய்வோம். நன்றாக  இருட்டியபிறகு திருட திட்டமிடுவோம். இதுவெல்லம் ஒரு கட்டத்தில் ஊரார்களால் அங்கிகரிக்கும் திருட்டுப் பட்டியலில் சேர்ந்துவிட்டது,

தென்னை மரங்கள், பனை மரங்கள் ஏறுவது எனக்குப் பிடிக்கும். எவ்வளவு உயரமாக இருந்தாலும் ஏறி விடுவேன். நெஞ்சையும் பிஞ்சு வயிற்றையும் கொடுத்து ஏறிவிட்டு இறங்கிப்பார்த்தால். சின்னச் சின்ன ரத்தக்கீறல்கள், ரத்தக் கசிவு அன்றி நெஞ்சிலிருந்து வயிற்றின் அடிவரை சிராய்ப்புகள் வந்து சிவந்து போய்விடும். அது இரண்டொரு நாட்களில் சரியாகிவிடும். எப்போது ஊருக்குப் போனாலும் புளியமரங்கள் ஏறி பழம் உழுக்குவதே நான்தான். இன்னும் நாவல் மரம், மா மரம் இப்படி ஒன்றுவிடாமல் ஏறுவேன். ஒருகட்டத்தில் கபடி விளையாட்டில் ஒருபக்க கையும், காலும் பாதிக்கப்பட்டபிறகு ஏறுவதுபோல கற்பனை செய்தாலே நடுக்கம் வருகிறது.

நாம் விரும்பியோ, விரும்பாமலோ  நம்மோடு  மதம் பின்னிக்கிடப்பதுபோல நம்மோடு மரங்கள் பிணைந்து கிடக்கிறது.  நான் பிறந்தவீடு மற்றும் இடங்கள் யாவும் மரங்களால் சூழப்பட்டது. எனக்கு விவரம் தெரிந்தும் அப்படித்தான் இருந்தது. ஊரின் மையத்தில் போகும் சாலையிலிருந்து பார்த்தால் என் வீடு கண்களுக்குப் புலப்படாது. மரங்களால் மறைக்கப்பட்டிருக்கும்.

அழகுக்காக என் வீட்டில் மரம் வளர்த்ததில்லை. மரம் வளர்ப்பதே அழகுதான். சில மனிதர்களை எப்படி நாம் மறக்கமுடியாதோ அப்படிதான் சில மரங்களையும் மறக்கமுடியாது அல்லது மறக்கக்கூடாது. 

உடுக்கை இழந்தவன் கைபோல எங்கள் இடுக்கண் களைந்ததே மரங்கள்தான். பிறந்தது முதல் தன் சுயத்தை மாற்றிக்கொள்ளாத  ஜீவன் …  மரம்.

எங்கள் வீட்டைச் சுற்றியிருந்த மரங்களுக்கு மட்டும் பேச தெரிந்திருந்தால் ஐந்து தலைமுறையினர்களின் வாழ்க்கை முறைகளையும் வரலாற்றையும் மிகத் துல்லியமாக அறிந்திருப்பேன். தொடர் தலைமுறையினரின் நேரடி சாட்சியாக  விரிந்தும் பூக்களை சொரிந்தும்  நிற்கிறது மரங்கள்.

எங்கள் பூர்வீக இடங்களைப் பங்கிட்டுக் கொள்ளும்போது மரங்களுக்காகதான் அதிக சண்டைகள் நடந்திருக்கிறது.என் வீட்டு வாசலில், எங்களுரில் வளர்ந்து நின்ற மரங்கள் என் கண்முன்னே படமாக விரிந்து நிற்கிறது.  வீட்டைச் சுற்றிலும் பருத்த பூவரசு மரங்கள் நெடிது வளர்ந்து கிளை பரப்பி நிற்கும். பூவரசம்பூவில் செய்து அம்மா அணிவித்த சிகப்பு கல் மோதிரம் பழுத்துபோகாமல் துளிர்விடும் கொழுந்துகளாக நினைவில் நிற்கிறது. வீட்டின் முன் வலதுபுறம்  ஒரு புளியமரம்  ஏணி  இல்லாமல் ஏறுவது சாத்தியமற்றது.  ஊஞ்சல் கட்டி விளையாடியது நெஞ்சை விட்டு அகன்றபாடில்லை. வல்லாரை சாப்பிட்டவர்களுக்கு மாதிரி வந்து வந்து போகிறது.. வீட்டின் இடதுபுறம் இரண்டு ஆட்கள் கட்டிப்பிடிக்கும் படியான மாமரம். காய்ச்சால் வரும்போது காய்களைப் பறித்து வெட்டி தண்ணிரில் வேகவைத்து சாறை எடுத்து புளிக்க புளிக்க குடித்த சம்பவம் இனிப்பாக ஞாபகத்தில் இருக்கிறது.  வாசலின் எதிரே ஒரு வளர்ந்து வளைந்த நுனா மரம். பூப்பதும் காய்ப்பதும், காய்கள் பழுத்து கருநிறத்தில் கீழே பழங்கள் சிதறிக் கிடப்பதும் தொடர்ச்சியாக பார்க்கலாம். மற்ற மலர்களில் கிடைக்காத நுனாம்பூ வாசத்தை இப்போதும் நுகர்வது மாதிரி இருக்கிறது. அந்த நுனா மரத்திலிருந்து ஒரு இருபது அடி முன்னே போனால் இடதுபக்கம் ஒரு பலா மரம். பிஞ்சு பூனாச்சி காய் பரித்து அதை உப்பு வைத்து நசுக்கி உண்டது அலையாமல் அடிநெஞ்சில் அப்படியே இருக்கிறது. . இன்னும் சற்று முன்னால்  குப்பைக்கொட்டும் இடம்  ஒட்டி இரண்டு மாமரம்.  ஒன்றில் வட்ட வடிவ மாங்காய், மற்றொன்று மல்கோவா. அந்த காய்கள் முழுக்க சூரியன் பட்டு சிவந்ததுபோலவே இருக்கும். அதைப் பறித்து வைத்து உடைத்து உப்பு வைத்து, மிளகாய்ப் பொடி தூவி சாப்பிட்டது தந்துகி மாதிரி அடிமனதிலிருந்து மேலெழுந்து வருகிறது. அதற்கு முன்பாக ஐம்பது அடி தள்ளி ஒரு ஒட்டு மாமரம். ஊரே காய்கள் பறித்துப்போகும். வண்டி வண்டியாக காய்க்கும் வரம் பெற்றது. மற்றபடி வாழைத்தோப்பு,  மூங்கில்கள் கூட்டம், தென்னைமரங்கள்  மற்றும் வேலியாக பூவரசு,  வேம்பு, ரோஜா வண்ணத்தில் கொத்து கொத்தாக பூக்கும் கிளேரியா, மற்றும் புளியமரங்கள் … இப்படி காடுகளுக்குள்தான் என் பால்யம் கடந்து போனது.

இப்போது மரங்கள் வைப்பதில் என் அம்மா மிகுந்த முனைப்பு காட்டுகிறார். பெற்ற பிள்ளைகள்மீது வைத்திருக்கும் நம்பிக்கையைவிட மரங்களை அளவுகடந்து நேசிக்கிறார். அதோடு பேசுகிறார். இன்று எங்கள் வீட்டைச் சுற்றிலும், வயல்வெளிகளிலும் எறக்குறைய ஐநூறு மரங்களுக்கு மேல் அம்மா நட்டு வைத்திருக்கிறார். பலன் தருகிறது. பசுமையாக வளர்ந்து நிற்கும் மரங்களைப் பார்க்கும்போது அவர் பெருமிதம் கொள்வதாகவும் சொல்லுகிறார். வாசலில் நின்ற அநேக மரங்களில் சிலவை அத்தைகளின் பெயர்களையும், சிலவை தாத்தா பாட்டியின் பெயர்களையும், அப்பா பெரியப்பா பெயர்களையும் சொல்லிக்கொண்டே சிலகாலம் இருந்தது. இப்போது அந்த மரங்களில் ஒன்றைத் தவிர வேறொன்றும் இல்லை.

மரங்களின் குறுக்குவெட்டுத்தோற்றம் வயதைச் சொல்லும், மனதின் குறுக்குவெட்டுத்தோற்றம் வலியைச் சொல்லும். இருந்து பின்னாளில் இல்லாதுபோன மரங்களை நினைத்தால் வலி வரும். பயன் மட்டுமே தரும் வகைகளில் மரங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. மரங்களில் சகலங்களும் மனிதனுக்கு பயன்படும். மனிதனின்  சகலத்தால் மரங்களுக்கு எந்தப் பயனும் இல்லை. சறுகுகள்கூட உரமாகும். இது சரீரத்துக்குப் பொருந்தாது.

நடப்பில் நான் ஊருக்குச் சென்றால் இளைப்பாறுவது என் தாய் வைத்த பலா மரநிழலில்தான்.  வாசல் முழுக்க படர்ந்து நிற்கிறது. வருடாவருடம் தேவைக்கு மிஞ்சி பழங்களைத் தருகிறது. தொடர்ந்து மரங்களில் இரவு நேரங்களில் குருவிகள் வந்து குழுமி சத்தம் எழுப்புகிறது. அதைத் தினமும் கேட்கமுடிகிறது. அதை நான் தொந்தரவாக ஒருபோதும் நினைப்பதில்லை. ஆட்டோ சத்தத்தில் மூழ்கிக்கிடந்த எனக்கு அது ஆறுதலளிக்கிறது. பறவைகள் வந்து கூடுகட்டி வாழுகிறபோதெல்லாம் அந்த மரங்களில் வாழ்கின்ற அதன் வாழ்க்கை தன்னிறைவு பெருவதாகவே இருக்கின்றது. செல்ஃபி எடுக்க விரும்பாத நான், அந்த மரங்களோடும் வந்தமர்ந்த பறவைகளோடும் செல்ஃபி எடுத்துக்கொண்டேன்.

மரங்கள் இல்லாத ஒரு வெளியைக் கண்களை மூடிக்கொண்டு கற்பனை செய்து பாருங்கள். காவிரி பாயாத தஞ்சாவூர் மண்மாதிரி மனசும் வறண்டு போய்விடும்.

மேற்படி, நின்றுகொண்டிருக்கும் எந்த மரங்களும் இன்னும் வெட்டப்படவில்லை. என் நினைவுகளில் உயிரோடு காடுகளாகத்தான் காட்சியளிக்கிறது.

வாழ்க மரங்கள் !

 

.கென்னடி