”சகதிப் பூ” நாவல் குறித்த என் மதிப்பீடு  09-01-2017

முலாம் பூசாமல் முன் வைப்பார்

ஆம்பல் தி.காமராஜ் அவர்களின் நான்காவது படைப்பு. அவரின் மற்ற மூன்று புத்தகங்களையும் படித்திருக்கின்றேன். அவரின் எந்த எழுத்துகளும் சராசரியாய் இயங்காது. அது இந்த மானுட வர்க்கத்தின் அவலங்கள் பேசும்; வாழ்வதிலிருக்கும் சிரமங்கள் குறித்துக் கவலைப்படும்; எதிர்காலம் பற்றிய ஏக்கங்களை வெளிப்படுத்தும்; தீர்வு சொல்லும்.

அவரின் படைப்புகள் முனைவர் பட்ட ஆய்வுக்காக ஒரு மாணவரால் எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்கிறது. அவரின் படைப்புகளைப் படித்தால், சமூக வெளியின் துல்லியமான இயக்கத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.

நிகழில் நடக்கும் நிஜங்களை முலாம் பூசாமல் முன் வைப்பார். சிலபோது இவர் எழுத்துகளை நுண்ணோக்கிப் பார்த்தால், கொப்பளிக்கும் கோபங்கள் வார்த்தைகளுக்குள் அனலேந்தி நிற்கும். கையில் அறம்கொண்டு ரம்பத்தைக் கூராக்குவதுபோல், எழுதும் திறம்கொண்டு கருத்துகளைக் கூர்மையாக்குவார்.

எல்லோருக்கும் பொதுவில் மழை பெய்வதுமாதிரி, இவர் கருத்து எல்லோருக்கும் பொருந்தி நிற்கும். சில கவிதைகள் ஒரு வாசிப்பில் புரிந்து கொள்ளமுடியாது. எஃகுவின் திண்மை உணரலாம். கோடுகளுக்குள் ஒளிந்துகிடக்கும் கோலம்மாதிரி இவர் வார்த்தைகளுக்குள் ஒளிந்து கிடக்கிறது வசியம்.

கண்டுகொண்டவர்கள் கவிரி வீசுவார்கள்

சிறு வயதில்… ஆம்பல் மண்ணில் வருடாவருடம் மே தினத்தன்று கம்யுனிஸ்ட் கட்சி தோழர்கள் சைக்கிள் பேரணி நடத்துவார்கள். நாம் நின்ற இடத்தைக் கடைசி வண்டி கடந்துபோக முக்கால் மணிநேரம் அல்லது ஒரு மணிநேரம் ஆகும். வைத்தகண் வாங்காமல் பார்ப்பேன். அதில் பரவசம் இருக்கும்; உணர்ச்சிகள் பீறீடும். அந்த மாதிரியான பரவசத்தோடும் உணர்ச்சிவசத்தோடும் படித்தேன். ஒரே வாசிப்பில் முடித்துவிட்டேன். கிராமிய நடை. வழக்கொழிந்துபோன அல்லது பயன்படுத்த மறந்துபோன அனேக வார்த்தைகளைக் கையாண்டு இருக்கிறார். பல இடங்களில் கருத்துகள் குத்தாலைமாதிரி கூர்மையாக இருக்கிறது. கண்டுகொண்டவர்கள் கவிரி வீசுவார்கள்.

இந்த நாவலை நான் வாசித்த நாழிகளில் பால்ய காலங்களை நோக்கி பயணம் சென்றுவிட்டேன். நடப்பு நேரங்களிலிருந்து தம்மை முழுவதுமாக மறக்கடிக்கிறது. ஒருசில அல்லது பற்பல விஷயங்களை தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வோடு ஒப்பிட்டு எழுதியிருக்கிறார். அதில் காட்சிப் படுத்தியிருக்கும் அனைத்து சம்பவங்களும் நிகழ்ந்து சற்றேறக்குறைய இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாகிவிட்ட போதிலும் அதன் ஈரம் குறையாமல் பதிவு செய்துள்ளார். அதில் பதிவேற்றப்பட்டிருக்கும் பெருவாரியான சம்பவங்களை நம் வாழ்வோடு பொருத்திப் பார்க்கலாம்; பலருக்குப் பொருந்தலாம். ஆனால், எல்லாவற்றையும் நேரடியாக என்னால் உள்வாங்கிக்கொள்ள முடிகிறது.

நான் அவரோடு பயணித்துக்கொண்டே இருக்கின்றவன் என்பதால், அவர் எழுதியதில் மிகைப்படல் இல்லை என்பது என் திட்டவட்டம். நடந்த சம்பவங்களை ரசிக்கும் படமாக கண்முன்னே விரித்து காட்டுகிறார்.

மறைத்தலற்ற வெளிப்படைத் தன்மை

ஒரு இதயமாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர், ஒரு இதயத்தை எப்படி கையாளுவாரோ அந்த நுட்பத்தில் கையாளப்பட்டிருக்கும் விஷயங்கள்… உறவு, காதல், நட்பு, பள்ளிக்காலங்கள், பொழுதுபோக்குகள், விளையாட்டுகள், வலி, சந்தோஷம், துக்கம், ஏக்கம், பெருமூச்சு… இன்னபிற.

”இப்படித்தா ஆரம்பிக்கும் அன்றைய வேலை, “ ஏய் சின்னா என்னடா வேலைக்கி வர்றியா?”  என்று தொடங்கும் முதல் வரிகளிலிருந்து, “எல்லா பேரப்புள்ளைங்களையும் ரெண்டு கையாளயும் கோத்துப்புடிச்சி அணைச்சபடியே அழைச்சிக்கிட்டு வீட்டுக்கு திரும்பி வரும் அம்மா.” என்று முடியும் இறுதி வரிகள்வரை சமரசங்கள் இல்லா சாகசங்கள் நிகழ்த்தியிருப்பார்.

இவர் கதை சொல்லும் உத்தி வாசிப்பவனை அயர்ச்சிக்கு உள்ளாக்காத வடிவத்தில் இருக்கிறது. ஒவ்வொரு பாகமும் ஒருவித சுவையில் உள்ளது. ஒரே விஷயத்தை அவர் தொடர்ச்சியாக சொல்ல மறுக்கிறார். இந்த பாணிதான் படிக்கும் என்னை புத்தகம் படிக்கின்றேன் என்ற எண்ணத்தை மறக்கடிக்கிறது. இவரிடம் ஒரு ஏதும் மறைத்தலற்ற வெளிப்படைத் தன்மை இருக்கிறது. ஒரு எழுத்தாளன் தன்னை ஒரு சந்தேகமற்ற, மாசில்லாத ஒருவனாகத்தான் முன்னிலைப் படுத்தவேண்டும். இவர் அவ்வாறானவர். இடைவெளிகள் வேண்டுமானால் எழுதும் வார்த்தைகளுக்கும் வார்த்தைகளுக்கும் இடையில் இருக்கலாம். வார்த்தைகளுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இருக்கக்கூடாது. தனிமனிதனாக சிறந்து நிற்பவர்.

எழுத்துகள் அதிகபட்சம் இந்தச் சமுதாயத்தில் என்ன வினையாற்றிவிடும்? கல்வெட்டுகள், பட்டயங்கள், ஓலைச்சுவடிகள், புத்தகங்கள் இப்படி படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வந்திருக்கிறோம் இலக்கியங்கள் மட்டும் இல்லையென்றால் நாம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்வின் விழுமியங்களை அறிந்துகொண்டு பெருமைப்பட்டுக்கொள்ள இந்தப் பூமியில் ஏதுமற்றுப் போயிருப்போம்.  

தன் தாயின் அளப்பறிய போராடங்களைச் சொல்லிக்கொண்டே வருகிறார். மிரட்சியாக உள்ளது. இவரின் சிறு பிராயகாலம் சவால்கள் நிறைந்ததாய் இருக்கிறது. காலம் சவுக்கடிகளைச் சரமாரியாய் தந்திருக்கின்றது.

சில புத்தகங்களை வாசிக்கும்போது இலைகளே இல்லாத மரத்திடம் நிழல் தேடி வந்திருக்கின்றோமோ என்று எண்ணத் தோன்றும். இதில் நிறைய இளைப்பாறுதல்கள்; ஆறுதல்கள். இதைப் படிக்கும்போது மறந்துபோன  அற்புதமான சம்பவங்கள் ஞாபகம் வருகின்றது. எழுத்தாளனை இது மாதிரியான இடங்கள்தான் வணக்கம் செய்ய வைக்கிறது.

இந்தப் படைப்பு என் போன்றோர்களுக்கான ஒரு மீள்பார்வை. ”சகதிப் பூ”வைப் படித்து முடித்தபிறகு மூடிவைத்துவிட்டு, கடந்த காலங்களில் என்னை கரைத்துவிடுகிறேன். ஆகா! அசை போடுவதற்கு எத்தனை எத்தனை விஷயங்கள்.  

எங்கள் கலை இலக்கிய ஈடுபாடுகள் குறித்து எழுதுகிறார். அருமை. எங்களூரில் எங்களின் முன்னால் இருந்த இளைஞர்கள் விளையாட்டுகளிலும் இடதுசாரி அரசியலிலும் அதிகம் அக்கறை செலுத்தினார்கள். அஞ்சல் ஓட்டம்மாதிரி அவர்கள் ஒரு கட்டையைக் கொண்டுவந்து எங்களிடம் கொடுத்தார்கள். நாங்கள் விளையாட்டு, கலை இலக்கியங்கள் மற்றும் இடதுசாரி அரசியலில் கொஞ்சம் கூடுதலாகவே அக்கறை செலுத்தினோம். அந்தக் கட்டையை நாங்கள் கொண்டு ஓடினோம். இப்போது எங்கள் ஊர் வாலிபர்கள் விளையாட்டுகளிலும், கலை இலக்கியத்தில் ஈடுபடுத்திக்கொள்வதிலும் சிறந்து நிற்கிறார்கள். அந்த வண்ணக் கட்டையை இந்தத் தலைமுறையினரிடம் கொடுத்துள்ளோம் அவர்கள் கொண்டு ஓடுகிறார்கள். ஆரோக்கியமான பந்தயம். எங்கள் ஊர் சுற்றுவட்டார ஊர்களுக்கு சிறந்த காட்டாக காலங்காலமாக இருக்கிறது என்பதை யாரும் மறுதலிக்கமுடியாது.

மரத்தை உலுக்கும் காற்றுபோல

மரத்தை உலுக்கும் காற்றுபோல மனதை உலுக்கும் காதலை மென்மையாக அதற்கே உரிய அணுசரனையோடு அணுகியிருக்கிறார். ஒரு பசியில் தொடங்கிய காதல் பேருந்தின் எதிரெதிர் பயணத்தின்போது பார்த்துக்கொண்டதோடு நிறைவு பெறுகிறது. கலகமோ, களங்கமோ இல்லை. சிலபோது காதல் தோல்வி பெறுவதில்தான் இருக்கிறது ஆட்டிப்படைக்கும் அழகு. அந்தக் காதல் காலங்களில் அவருக்குள், அவர்களுக்குள் நடந்த வேதியியல் மாற்றங்களை கலாபூர்வமாக எழுதுகின்றார். இரண்டு தண்டாவளங்களுக்கிடையே இருக்கும் சமதூரம்மாதிரி ஒரு சரியான இடைவெளியில் ஆத்மார்த்தமாக பயணித்து இருக்கிறார்கள்.

எதையும் ரசிக்கும் விதமாக எழுதுகிற திறமை இவருக்கு தொடக்கக் காலத்திலிருந்தே இருக்கிறது. எதையும் மறக்காமல் எழுதியிருக்கிறார். எங்களின் கடந்துபோன பால்யகால வாழ்க்கையின் பதிவு. நான் மனதில் பத்திரப்படுத்தி வைத்திருந்த விஷயங்கள் இனி மறந்தாலும் பராவாயில்லை. அவைகள் யாவையும் இந்தச் ”சகதிப் பூ”வில் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது.

இத்துடன் இணைப்பாக ஒரு தகவல்

வெளியிடப்பட்டிருக்கும் ஆம்பல் தி. காமராஜ் அவர்களின் சகதிப் பூ நாவலை வாசக அன்பர்கள் வாங்கிப் படியுங்கள். ஒரு படைப்பாளனை ஊக்கப்படுத்த இதைவிட வேறு என்ன விருதுகள் இருக்கின்றது.

சாணக்கியன் சொல், “நல்ல புத்தகங்களைத் தேடித்தேடி படிக்கவேண்டும் என்பது சான்றோருக்குத் தெரியும்”

நன்றி !

ஆம்பல் .கென்னடி