பொறந்து வளந்த ... பாடல்  21-09-2016

பல்லவி

பொறந்து வளந்த  மண்ணைவிட்டு

பறந்து வந்தேன் வேலைக்கி

பொறுத்திருங்க பணம் அனுப்புறேன்

கைக்கு வரும் நாளைக்கி

 

வெடல வயசில வேகவேக மாக

கடல தாண்டியே தூரதேசம் போக

சத்தியமா ஆசை இல்லை – வாழ

சாதகமா ஏதும் இல்லை                                      (பொறந்து…)

 

சரணம் 1

பெத்தவங்க மொகத்த பாக்க

மனசுக்குள்ள ஏக்கம்

புள்ளைங்கள நெனைச்சி பாத்தா

கலைஞ்சி போவும் தூக்கம்

 

போனபோட்டு பேசபோன

அழுகை சத்தம் கேட்கும் - ஆசை

பொண்டாட்டிய பிரிஞ்ச வலி

வந்து வந்து தாக்கும்

 

’அழாம பேசு’ன்னு சும்மா

அதிகாரமா கத்தி

சத்தம் கித்தம் கேட்காம

அழுவேன் வாயபொத்தி  - மெல்ல

அழுவேன் வாயபொத்தி                                      (பொறந்து…)

 

சரணம் 2

ஒருத்தனோட பணத்த வச்சே

ஒட்டு மொத்தமும் நடக்கும்

நெனைச்ச வாழ்க்கை நெறைவேறாம

நெஞ்சோரமா கெடக்கும்

 

ஒடம்பு நலம் விசாரிச்சு

ஒரு போனு வருமா – இப்டி

ஒவ்வொரு நாள் போனிச்சின்னா

நிம்மதிதான் தருமா

 

எந்திரமா வேலை பாத்து

ஒடம்பு எளைச்சி போகும்

’வந்திட வா’ன்னு கேட்க

வாய் வரும் நோகும் – கேட்க

வாய் வரும் நோகும்                                             (பொறந்து…)

 

சரணம் 3

நல்லது கெட்டது நடக்கிறப்போ

வரமுடியாம போகும்

நெனைச்சி நெனைச்சி மனசு

நெருப்பு இல்லாம வேகும்

 

பல நாட்டுக் காரனோட

பேசி பழகி படுத்து - வயிரு

பசிக்காக தானா சமைச்சி

சாப்பிட்டு ஒடம்பைக் கெடுத்து

 

தானா அழுது தானா சிரிச்சி

நாட்கள் கடந்து போகும்

தாய்நாட்ட நெனைச்சிகிட்டா - சோகம்

தவிடுபொடி ஆகும்                                             (பொறந்து…)

 

அ.கென்னடி